சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப். கேணல் ராஜன் அமரர் சோமசுந்தரம் சற்குணம் அவர்களின் 34ஆம் ஆண்டுவீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

...::.34ம் ஆண்டு நினைவஞ்சலி::...



அன்றைய நாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மை விட்டுப்பிரிந்தான்.

முதல் நாள் மாலை பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம், எதிரியின் சிறிய படையணி ஒன்றன்மீதான சிறிய தாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினார் கோபியும் தோழர்களும்.

எதிரியின் புதிய நில ஆக்கிரமிப்பைக் கண்டு குமுறிக்கொண்டிருந்த ராஜன் உடனடியாக ஒப்புதல் தந்துவிட, சிறிதாய்த் திட்டமிடப்பட்டிருந்த அந்தத் தாக்குதலுக்கான ஒழுங்குகள் இரவோடிரவாக நடந்து முடிந்தன.

திட்டம் மிகவும் சிறியதாகவும் சுலபமானதாகவும் எதிர்பார்க்கப்பட்டதால், திட்டம் பற்றி அதில் நின்றவர்களைத்தவிர வேறு எவருக்கும் எதுவுமே தெரியாது போய்விட்டது.

திட்டத்தின் வெற்றி பற்றிய ‘வோக்கி’ச் செய்தியை எதிர்பார்த்தபடி காத்திருந்தான் ராஜன்.

கிளைமோர்ச் சத்தம் கேட்டவுடன் கோபி…… கோபி…… என்று கூப்பிட்டும் தொடர்பில்லாமற்போனது.

தலையிற் காயத்துடன் கோபியைக் கண்டதும் அவன் வழமையான போர்க்களத்து ராஜனாய் மாறிப்போனான்.

என்ன நடந்ததோ? இரவு கிளைமோர் வைத்தவர்கள் கவனமின்றி நிற்க எதிரி கண்டானோ? இல்லை எம்மவர் ஏதேனும் ‘வோக்கி’யில் மாறிக் கதைத்துவிட்டனரோ? வேவு பார்த்தோர் தவறோ? வேறு பிழைகளோ?

கோபியின் அணியைச் சூழ்ந்து எதிரிகள். தனி ஆளாய் உள்ளே புகுந்த ராஜன், எல்லோரையும் பின்னுக்கு அனுப்பி நின்று அடிபட்டு…… அவன் வரவில்லை.

கணேஸ், கிங்ஸ்லி என்று எட்டுப் பேருடன் ஒன்பதாவது ஆளாய் ராஜனும் வரவில்லை.

ராஜன் இல்லையென்ற செய்தி மெல்லப்பரவ அதிர்ந்து துடித்தது தமிழீழம்.

அவன்மீது கொள்ளை அன்பை வைத்திருந்த தலைவர், உயிராய்ப் பழகிய நண்பர்கள், அவனால் உருவான போராளிகள், அவனைக் காத்த மக்கள் என்று தமிழீழம் அழுது துடித்தது.

ராஜன் – றோமியோ நவம்பர்.

எங்கள் போராளிகளின் மனத்தில் நிறைந்து விட்ட இனிய புயல், இறுகிய பாறை.

அடிக்கடி ரவைகளால் தைக்கப்பட்டு, பிய்பட்டு, இரத்தம் கொட்டி, தழும்புகளால் நிறைந்த தேகம்.

அவனது மனம் மட்டும் தளரவில்லை அது இறுகிப் பாறையாய் உருவாகியிருந்தது.

1987 இன் தொடக்கப் பகுதியில் ஓர் இருண்ட பொழுது. யாழ் பொலிஸ் விடுதியும் தொலைத்தொடர்புக் கட்டடமும் கோட்டைக்குத் துணையாய் நிமிர்ந்து நின்றன.

அதைநோக்கி இருளோடு இருளாய் நகரும் புலிவீரர்கள்.

அதில் ஒருவனாய் ராஜன்.

தன் கை ஆயுதத்தைத் தான் பார்க்க முடியாத காரிருள்.

பின்னால் நிற்பவரின் மூச்சுச் சுடும்.

வியர்வையாற் குளிக்கும் தேகம்.

தாகம் தண்ணீருக்காய் மட்டுமல்ல, அதற்கும் மேலாய், உயர்வாய்.

தாகம் தணிக்க உயிர்கொடுக்கத் தயங்காத வேகம், உறுதி.

இது எம் தாயகம்.

இங்கு அந்நியனுக்கு என்ன வேலை?

இன்று வெல்வோம்.

அந்நியன் பாடம் படிப்பான்.

அக்காலத்தில் அவன் காரைநகர் கடற்படைக் காவலரண் பொறுப்பாளன். அதற்கு முந்திய சண்டையிலெல்லாம் தன் முத்திரையை ஆழமாய்ப் பதித்திருந்தான். கிட்டண்ணை அவனைக் கவனித்து வைத்திருந்தார். இந்தச் சண்டைக்கென ராஜன் கிட்டண்ணையால் விசேடமாக அழைக்கப்பட்டிருந்தான். ராதா அண்ணை தலைமையில் உள்நுழைந்த குழுவில் ராஜனும் ஒருவன்.

உள்நுழைவோருக்கு குறுகியதாகவும் வெளியில் நிற்போருக்கு நீண்டதாயும் அமைந்த இரவு விடிந்த போது….

தனது படைவீரர்களை ‘யாழ்ப்பாணக் காடுகளில்’ தேடிக் கொண்டிருந்தது சிறீலங்கா அரசு.

யாழ்ப்பாணக் காடுகளை தேடிக்கொண்டிருந்தது உலகு

தன் நண்பர்கள் சிலரையும் தன் கைவிரல்கள் இரண்டையும் இழந்தபின் மருத்துவமனையில் இருந்து அந்தச் சண்டையில் தனது அனுபவத்தை மீட்டுக்கொண்டிருந்தான் ராஜன்.

இந்திய இராணுவக் காலம்இ அந்த இரும்பை உருக்காக உருவாக்கிய நாட்கள்.

இந்தியக் காலத்தில் ராஜனின் நாட்கள் வீரம் செறிந்த நாட்கள். அவன் நின்று பிடித்தது வெறும் அதிஸ்டத்தினால் மட்டுமல்ல. வீரம், விவேகம், அவதானம், அன்புக்கினிய எம்மக்களின் பாசம் இவைதான் அவனைக் காப்பாற்றிய கவசங்கள். தொடர்ச்சியாக முற்றுகைகள் தொடர்ந்து தூக்கமற்ற இரவுகள்.

முற்றுகை ஒன்றிலிருந்த பாய்ந்தோடித் தப்பித்து வந்த நாளின் மறுநாட்காலை ஒரு வாரக்கசகசப்புத்தீரக் குளித்துவிட்டு நொண்டிக் கொண்டு வந்தான். அன்புத் தோழனின் மடியில் ஈரம் ஊறியகாலை முள்ளெடுக்கக் கொடுத்துவிட்டு இருந்தவன் அப்படியே தூங்கிப் போனான் பாவம்.

எத்தகு நெருக்கடிகள் மத்தியிலும் உறுதிதளராத இரும்பு மனம். அதிகம் பேசாதவன். போர்க்களத்திற் பேசுவான். உறுதியாய்த் தன்னம்பிக்கையுடன், சக போராளிகள் இலகு நிலையில் வைத்திருக்கும் நகைச்சுவையுடன்.

இந்தியச் சண்டையின் ஆரம்ப நாட்கள். எமது பொன்னாலைப் பனைவெளிகள் ஊடாக அந்நியப் பாதங்கள். அனுபவம் குறைந்த எமது வீரன் ஒருவனிடம் இயந்திரத்துப்பாக்கி. அவனது சூடுகள் உயர்ந்து மேலாய், மிக மேலாய் வீணாகிப்போயின. இதைக் கண்ட ராஜன் ‘டேய் தம்பி ஆமி இன்னமும் பனையிலை ஏறேல்லை. கொண்டா ஜி.பி.எம்.ஜி யை.’ ஆயுதம் கைமாற ஒரு சூட்டுத்தழும்பினை பதித்து வைக்கிறது.

பொன்னாலையிற் கால் கிழிந்து, இந்தியாவில் காயம் ஒழுங்காக மாறமுதல், நாட்டுக்கு என்று துடிதுடித்துப் புறப்பட்டு, மீன்பிடிப் படகில் தீவுக்கு வந்து, இங்கு வந்தால், எங்கும் இந்தியத் தலைகள், தடங்கள்.

‘எங்கட ஆட்கள் எங்கே’ என்று எல்லாச் சனத்தையும் கேட்டுத்திரிந்து சந்தித்தான்.

யாழ்ப்பாணத்தில் எங்கும் இராணுவ முகாம்கள் நிறைந்திருந்த காலத்தில் ராஜன் வந்து சேர்ந்ததும் இந்தியர்கள் பிரச்சினையை வேறுவிதமாகச் சந்தித்தார்கள். அவனது உறுதி இந்தியர்களை திணற வைத்தது.

அரைத்தூக்கம் கலையாத அதிகாலைப் பொழுது, ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் குரைக்கத் தொடங்க, உடலில் உள்ள இரத்தம் எல்லாம் ஒன்றாகிச் சூடாகிப்பாயும்.

‘டேய் தும்பன், வெற்றி, எழும்புங்கோடா!’

‘ரங்கன்’

‘அண்ணை நான் முழிப்புத்தான்’

‘வேளிக்கிடுங்கோ……’

சிரிப்புத்தான் வரும். என்னத்தை வெளிக்கிடுவது? ஜூன்ஸ் போட்டபடி, கோல்சர் கட்டியபடி வெறுநிலத்தில் படுக்கை, தலைமாட்டில் ஆயுதம் வைக்கவென விரித்திருக்கும் சாரத்தை எடுத்துச் சுருட்டி இடுப்பிற் கட்டினால் சரி.

“சரி வெளிக்கிட்டாச்சு”

நாய்கள் குரைக்கும் சத்தம் நகர – நகர, அது இராணுவத்தின் நகர்வை நிழலாய்க் காட்டும்.

முன் படலை பிசகென்று பின் வேலியால் பாய, காலில் நெருஞ்சி குத்தும். முந்த நாள் வாங்கிய செருப்பு நேற்றைய ரவுண்டப்பில் தவறிப் போனது நினைவுக்கு வரும்.

விரைவாய்ச் சத்தமின்றி, சத்தமின்றி விரைவாய அல்லது உள்ளே ரவுண்டப்புக்குள்ளே.

ராஜன் அருகில் இருந்தால் அனைவருக்கும் நம்பிக்கை – எப்படியும் ரவுண்டப்பை உடைக்கலாம்.

‘கட்டாயம் உடைக்கலாம். ஒருவரும் பயப்படாதேங்கோ’

‘டேய் தும்பன் நீ முன்னுக்குப் போய் எத்தனை வாகனம் நிக்குதெண்டு பார். கண்டிட்டான் எண்டால் அடியாமல் வராத’

‘ரங்கனும் வெற்றியும் அங்காலபோய் அடுத்த சந்தியைப் பாருங்கோ. டேய் ரங்கன் ஜி-3 ரவுண்ஸ் தட்டுப்பாடு சும்மா அடிக்காதை’

‘தம்பி நீங்கள் என்ன கிறனைட்டோ வைத்திருக்கிறியள். பயப்படாதேங்கோ. என்னோடை நில்லுங்கோ. நான் சொல்லேக்கை கிறனைட் அடிக்கவேணும்’

‘அம்மா எல்லோரும் இதில குவிஞ்சு நிண்டால் தான் கட்டாயம் காணுவான். நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு உள்ளுக்குப் போங்கோஇ இந்தாங்கோ கோப்பையையும் கொண்டு போங்கோ.’

கொஞ்ச நேரத்தின் பின் கேட்கும் வெடிச்சத்தங்கள் ஓயும் போது, தேத்தண்ணீர் கொடுத்த அம்மா ‘ஆர் பெத்த பிள்ளையோ முருகா காப்பாத்து’ என வேண்டிக்கொண்டிருக்கும் போது, இரண்டு றோட்டுக் கடந்து நின்று, வரும் ஆட்களிடம் சைக்கிள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் ராஜனும் அவனின் ஆட்களும்.

கிறனைட்டுடன் வந்த சின்னப்பொடியன் ‘ராஜண்ணை நான் உண்மையாய்ப் பயந்திட்டன் இனிப் பயப்படமாட்டன். நான் அடிச்ச கிறனைட்டில ஆமி செத்திருப்பானே?’ என்று கேட்டுக் கொண்டிருப்பான்.

அவர்களின் அநேகமான நாட்கள் இப்படித்தான் விடியும்.

இன்னொரு காலைவேளை, படுத்திருந்த வீட்டு ஒழுங்கையால் தெருவுக்கு வர, முன்னால் இராணுவ அணி. மற்றவர்கள் காணமுதல் ராஜன் கண்டுவிட்டான். ‘இண்டைக்கு பொழுது சூடாத்தான் விடிஞ்சிருக்கு. நான் இதில வைச்சுத ;தொடங்கிறன். நீங்கள் இரண்டு பேரும் மற்றப் பக்கத்தாலை வாருங்கோ.’ இராணுவம் நிற்கும் செய்தியை அலாதியாய்ச் சொல்வதுடன்இ அந்தக் கணத்திலேயே திட்டமும் தாக்குதலும். எத்தகைய சூழ்நிலையிலும் ஆபத்தை எதிர்கொள்ளக் கொஞ்சமுந் தயங்காத நெஞ்சுறுதி. பல கட்டங்களில் ராஜன் சாவின் விளிம்பில் ஏறி நடந்து வந்துள்ளான்.

எமது மண்ணில் அந்நியன் சுதந்திரமாய்த் திரிவதா? நிம்மதியாய் வாழ்வதா? என்று குமுறுவான். அவன் அடிக்கடி கூறும் வார்த்தைகள் ‘மச்சான் உவங்களை இப்படியே விடக்கூடாது. இண்டைக்கு ரெண்டு ஆமியெண்டாலும் கொல்லவேணும்’

ஒருநாள் பண்டத்தரிப்பு முகாம். ‘என்ன வெடிச்சத்தம்?’ என இந்தியர்கள் சனத்தை விசாரித்துக்கொண்டிருக்கையில் ராஜனும் தும்பனும் தங்கள் பிஸ்டலை இடுப்பில் வைத்தபின்னர்இ இறந்த இராணுவத்தின் துப்பாக்கிகளை ஆளுக்கொன்றாய் எடுத்தபடி சைக்கிளில்……

சுழிபுரம் சந்தி முகாம் அருகே, இந்திய இராணுவம் ஜீப்புடன் செத்தபடி கிடக்க…… எம் போராளி காசிமை இழந்த பின்னர், நடு நெஞ்சில் துப்பாக்கி துளைத்த ராஜனைத் தூக்கிக் கொண்டு வந்தனர் தும்பனுடன் நகுலனும் நித்தியும்.

இந்திய அடிவருடிகள் முகாமிட்டிருந்த சுன்னாகம். இருபுறமும் இராணுவக் காவல். அதனுள்ளே கும்மாளமிட்டனர் எம்மினத்தின் அவமானச் சின்னங்கள். திட்டமிட்ட பெரிய தாக்குதல். அதிக ஆட்கள். முதல்நாள் றோட்டுக் கடக்க முடியாமல் ஒத்திவைத்த தாக்குதல். அடுத்தநாள் முயற்சி செய்தபோது, இரவு ரோந்து இராணுவத்தை எதிர்கொள்ள, எல்லாமே பாழ்.

ராஜனை இருட்டுக்குள்ளால் இழுத்துவந்து குப்பியைக் கழட்ட, வந்தது நூல் மட்டுமே.

‘மச்சான் சுபாஸ் பிறண் அடி கொளுவியிட்டுது.’ எனக்குப் பெரிய காயம்…… இந்த முறை சரிவராது…… எல்லோரும் சாகாமல் இவர்கள் இரண்டு பேரையும் கொண்டுபோங்கோ சொன்னவன் பின்னர் கரைச்சல் தராமல் மயங்கிப் போனான்.

‘ஐயோ ராஜண்ணை….’ என்று, சூட்டும் ரங்கனுமாய் வாய்க்குள் விரலைவிட்டுத் தோண்டி, தேங்காய் எண்ணை பருக்கி, தேங்காய் உடைத்து பால் பிழிந்து பருக்கி காரில் வைத்து ஸராட் இல்லை என்று கத்தி தேடி, வேலிவெட்டி பாதை செய்து, தள்ளு தள்ளு என்று, தள்ளிக்கொண்டு போய், உள் ஒழுங்கை வீட்டில் வைத்துஇ நீர்வேலிச்சனத்தை காவலுக்குவிட்டு,

அந்தநாள் விட்டு அடுத்தநாள் வாதரவத்தைக்குப் போய்ச்சேர, ராஜனும் முரளியும் மயக்கம் தெளிய, லோலோ மயங்கிப்போய், பின்னர் பொய்விட்டான். எம்மைவிட்டுப் போயேவிட்டான்……

அவனது தோழர்களது இழப்புக்கள் ஒவ்வொன்றின் போதும் அவன் அமைதியாய்க் குமுறுவான். கண்கள் வெறிக்க அவன் பாறையாய் இறுகுவான்.

ராஜனது இளமைக்கால நண்பன் தெய்வா, பாடசாலைக் காலத்திலிருந்து ஒன்றாய்க் கடலுக்குத் தொழிலுக்குப் போய் வந்து……, படித்துப் படித்து விளையாடி……, இயக்கத்திற்கு வந்து……, ஒரே படகில் இந்தியா போய்……, கூமாப்பிட்டிப் பயிற்சி முகாமில் ஒன்றாய் இருந்து……, மலைக்கு மூட்டை சுமந்து……, கழுதை கலைத்து……, பணிஸ்மன்ற் வாங்கி……, பயிற்சி முடித்து……, கரைக்கு வந்து……, எல்லாம் வரை ஒன்றாய் இருந்த தெய்வா பிரிந்துவிட்டான். கடலில் ஓட்டியாய்ப் போனவன் வரவில்லை. அவன் வரவில்லை என்று மாதகல் அழுதது ராஜன் அழவில்லை. அந்தப் பாறை இறுகியது.

ராஜனும் தும்பனும் பிரிந்தது கிடையாது. ராஜன் என்றால் தும்பன். தும்பன் என்றால் ராஜன். துப்பாக்கிகள் பங்கிடும் போது ‘தும்பனுக்கு கையேலாது எம் 16 தான் வேணுமம்மான்’ – ராஜன் சொல்ல சூடுபட்டு உடைந்த வளைந்த கையைத் தும்பன் மேலும் வளைத்து வந்து வாங்கிவிட்டு மறைவாய்ப்போய் பெரிதாய்ச் சிரித்தார்கள்.

ஒன்றாய்ச் சாப்பிட்டு, அடிபட்டு, கலைபட்டு ராஜனின் உயிருடன் இணைந்த நட்பு. சுன்னாகத்தில் காலில் இரண்டு வெடி பட்டு காயம் மாறி இந்தியாவில் இருந்து வந்தபோது, தும்பன் இல்லை என்ற செய்தி அவனுக்குத் தெரிந்து தானிருந்தது.

இராணுவத்தின் சூடுதானா? விபத்தா என எல்லோரையும் ஓடிஓடிக் கேட்டு ஒய்ந்திருந்த வேளையில், தும்பன் இல்லாத ஏழாலைக் கிணற்றுக்கட்டு, வாழைத்தோட்டங்கள், பனங்கூடல்கள், கலைபட்டுப் பாய்ந்த வேலிகள்இ துரையண்ணை வீட்டு ஊஞ்சல்கள் என்று எல்லாமே வெறுமையாகத் தெரிய ரங்கன் அழுவான் ராஜன் அழமாட்டான். அந்தப் பாறை இறுகியது.

ரங்கன் சைக்கிள் உழக்க ‘பாரில்’ ராஜன். சுட்டுவிரல் விசைவில்லையொட்டியபடி, கொஞ்சம் அழுத்தினால் ரவை பாயும். எங்கும் போகும் சைக்கிள் சடசட என்று வெடிகேட்கும், சைக்கிள் ஒன்றுடன் கொஞ்ச ரவையும் செலவாகும்.

‘தப்பியது ரங்கனால்’ என்பது ராஜன். ‘ராஜண்ணை இல்லையென்றால் நானில்லை’ என்பான் ரங்கன்.

மாவிட்டபுரத்தில் வைத்து வரிசையாய் வந்த மொட்டை ஜீப்புக்கு அடிக்க நல்லாய் நடந்த சண்டை நெடுமாறன் இறந்து, ரங்கன் காயப்படத் திசைமாறியது.

திருச்சியில், ‘ராஜண்ணை…… ராஜண்ணை’ என்று ரங்கன் உரத்துக்கூறி மெல்ல முனகி அழுது அழுது மௌனித்த போதும் யாழ்ப்பாணத்தில் நின்ற ராஜன் அழவில்லை. பாறை இறுகியது.

மாதகலில் தன்னுடன் நின்ற ஏழுபேரை வைத்துப் பெரும் கூட்டமாய் வந்த இந்தியக் கைக்கூலிகளை அடித்துக்கொன்று, கலைத்து, பெருந்தொகையாய் ஆயுதம் அள்ளிவந்த போது, எல்லா நாளும் ராஜனுடன் திரிந்த வெற்றி திரும்பிவரவில்லை.

ஆயுதங்கள் எல்லாம் அப்படியே குவிந்து கிடக்க, காயப்பட்ட தம்பியையும் வெற்றியின் உடலையும் குப்பிளானில் நின்ற கிளியிடம் அனுப்பிவிட்டு, ஆயுதங்களுக்குக் காவலாய் நின்ற போதும் ராஜன் அழவில்லை. அந்தப் பாறைதான் இறுகியது.

இந்தியா போனது. தமிழீழ வீடெங்கும் மகிழ்ச்சிக் குரல்கள், தெருவெங்கும் புலிவீரர் – மிச்சமாயிருந்தன இந்திய எச்சங்கள். புலனாய்வுப் பணியில் ராஜன்.

அவனது மனம் விடுதலைப் போரையும் அதனுடன் இணைந்தவற்றையும் தவிர வேறொன்றைப் பற்றியும் எண்ணியதே கிடையாது. இப்படித்தான் ஒருநாள் பாடசாலையில் அவனுடன் படித்தவள் இயக்கத் தொடர்பிலும் மீண்டும் அறிமுகமாகி பழகிக் கடிதமொன்றில் என்னவோ எழுதி அவனிடம் அனுப்பி விட்டுக் காத்திருந்தாள் பாவம்.

கடிதத்தைப் படித்தவன் பக்கத்தில் நின்றவனுடன் நேரே போய்க் கடிதத்தைக் கிழித்துக்கொடுத்துவிட்டு ‘போராட்டம் தவிர வேறொன்றும் நான் நினையேன்’ என்றான்.

தன் ஆசைமகன் போகும் வாகனத்தையென்றாலும் பார்ப்போமென்று தாய்க் கிழவி றோட்டில் கால்கடுக்க காத்துநிற்கஇ இவன் மாதகலில் தான் போன வேலையை முடித்துத் திரும்பி வருவான்.

சிறீலங்காவுடன் சண்டை தொடங்கியது. ராஜன் ஓய்வின்றி சுழன்றான். அடிக்கடி அண்ணையைச் சந்தித்தான். எல்லா இடமும் திரிந்தான். ஒவ்வொரு பங்கருக்கும் ஒவ்வொரு மண்மூட்டைக்கும் இடம் சொன்னான்.

மயிலிட்டியில் பெருஞ்சமர். ராஜன் ஊண் உறக்கமின்றி நின்று வழிநடத்தினான். மழையாய்ப் பொழியும் செல்கள் – ரவைகள். மயிலிட்டிச் சண்டையில் மட்டும் இரண்டு தடவைகள் குண்டுச் சிதறல்கள் அவனைத் துளைத்துச் சென்றன. ஓய்வில்லை – அங்கு நடந்துகொண்டிருந்த யுத்தத்தில் இருந்து அவனால் ஒதுங்கியிருக்க முடியவில்லை.

கோட்டை முற்றுகை இறுக இறுக எங்கள் தளபதிகளின் தூக்கமற்ற இரவுகள் பெருகிக் கொண்டிருந்தன. மணியந்தோட்டத்திலிருந்து பொன்னாலைவரை நின்ற இளம் போராளிகள் ராஜனைக்கண்டு சிரிப்பர். இரவில்லை, பகலில்லை, ஓய்வில்லை, உணவில்லை தன்னைப் பிழிந்து முற்றுகைக்கு உரம் கொடுத்தான். பாணுவின் உற்ற துணையாய் முற்றுகைக்குத் துணைநின்றான்.

எம்மால் உள்ளிறங்க முடியாதுபோய்விட்ட, இரண்டாவது கோட்டை உட்புகல் நடவடிக்கை முடிந்து விடிந்த போது, ‘றோமியோ நவம்பர், றோமியோ நவம்பர்’ என்று பாணுவின் ‘வோக்கி’ கூப்பிட்டபோதும் பதிலில்லை.

மானிப்பாய் மருத்தவமனையில் பேச்சு மூச்சின்றி கிளி, ஜவான் ஆகியோருக்கிடையில் கந்தல் துணிபோற் சுருண்டுபோய்க் கிடந்தான். காயம் மாறி கொஞ்சம் தேறி எழும்பிவந்தவன், இப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில்.

இந்தக் காலம் ராஜனை ஒரு சிறந்த நிர்வாகியாக உருவாக்கியது. பால்ராஜின் துணைவனாய் நின்று, படைப்பிரிவை உருவாக்குவதிற் பெரும்பங்காற்றினான் சகல போராளிகளுடனும் அன்புடன் – கண்டிப்புடன். அது கடுமையான பயிற்சிக்காலம்.

தமிழீழத்தின் எல்லா இடங்களில் இருந்தும் வந்திருந்த போராளிகள்.

குடும்பத்தைப் பிரிந்து வந்தவர்க்குத் தாயாக, தந்தையாக, நண்பனாக, ஆசானாக.

தமிழேந்தி அண்ணனிடம் காசுவாங்கி, இல்லையென்றால் ஊரில் கடன் வாங்கி, அதுவும் முடியாவிட்டால் வீட்டுக்குப் போய் அதை – இதைத் தூக்கி, தமையன் வியாபாரத்திற்கு வைத்திருக்கும் சாமான்களை அள்ளி வாகனத்தில் ஏற்றி…… எப்படியோ போராளிகளைத் தனது பிள்ளைகளாய் – உயிராய்ப் பார்த்தான், பராமரித்தான்.

வன்னி யுத்தகளம். எங்கள் வன்னிக் காடுகளை – எதிரியின் பல்லாயிரம் படைகள் ஊடறுத்துவர முற்பட்ட ‘வன்னிவிக்கிரம’, பெரும் படைகொண்டு ராஜன் மோத எதிரிப்படை திணறியது. சுட்டு வீழ்த்திய ஹெலிகொப்டர்த் துண்டுகளை அள்ளி எடுத்து அனுப்பிய பின்னரும் தொடர்ந்தது சண்டை.

எல்லாப் பக்கங்களாலும் பூவரசங்குளம் சந்திக்கு வந்து ஏறிய எதிரிகளை எதிர்கொண்டனர் எம்வீரர்கள். கடும்சண்டை.

ஆகாயத்தை நோக்கி நின்றவைகளும் நிலம் நோக்க சகல ஆயுதங்களையும் ஏந்திய கரங்கள் உறுதியாய் நிற்க, ஓடினான் எதிரி.

கொஞ்சநாள் இடைவெளியில் எதிரியின் இன்னொரு முயற்சி. வவுனியாவால் நகர்ந்து தோற்ற எதிரி, இம்முறை மன்னார்ப் பக்கமாய்……

இம்முறை சண்டை கொஞ்சம் கடுமையாய்…… எமது வீரர்களை இருபுறமும் சூழ்ந்தபடி எதிரி. ராஜனை உணர்ச்சிவசப்பட வைக்கும் கடும் சண்டை.

எதைப்பற்றியும் யோசிக்காது எதிரியின் முகம் தெரியும் தூரத்தில் நின்று மோதிய, ராஜனின் விரல் இல்லாத உள்ளங்கையை உடைத்தபடி ஒரு ரவை இன்னொரு ரவை அதே கையில் நடுவில்.

மிக அருகில் எதிரியின் துப்பாக்கி சடசடக்க உறுதியாய் எதிர்த்து நின்றனர் தோழர்கள்.

உள்ள ஆயுதங்கள் எல்லாம் கொண்டுபோய், அடிஅடி என்று அடித்து ஆமியைக் கலைத்துவிட்டு மயங்கியபடி கிடந்தவனை, இழுத்துவந்து சேர்த்தான் ரூபராஜ்.

அன்று ராஜன் திரும்பி வந்தது நம்பமுடியாத அதிசயம். அவன் மயங்கி வீழ்ந்து கிடந்த போது, எதிரி அருகில், மிக அருகிலேயே நின்றிருந்தான்.

ஆனையிறவுப் பெரும் போர்க்களம். ஓய்வின்றிப் பம்பரமாய் ராஜன்.

சென்றி நிற்கும் பங்கருக்குள், பசீலன் பொயின்ரில், சமையிற் கொட்டிலில், சந்தியில் இருந்த மெடிக்ஸ் வீட்டில் எங்கும் நின்றான் எல்லா நேரமும் நின்றான்.

கட்டைக்காட்டில் ஆமியின் கவச வாகனம் நகர்ந்தாலும் ஆர்.பி.ஜி.க்கு றோமியோ நவம்பர்.

புல்லாவெளியில் ஆட்லறி செல் விழுந்து இரண்டுபேர் செத்து ஐந்துபேர் காயம் என்றால், மெடிக்ஸ் வானுக்கு றோமியோ நவம்பர்.

மெடிக்ஸ் வானை போகவிடாமல் மேலே கெலி நின்றால் கலிபர் அனுப்பும் றோமியோ நவம்பர்.

குணாவின் குறூப்புக்கு அனுப்பிய சாக்குகளுக்குச் சாக்கு ஊசி வேண்டும் என்றால், றோமியோ நவம்பர்.

வீரர் வீழ்ந்து வியூகம் உடைந்து எதிரிப்படை முன்னேறும் வேளையில், தனித்த வீரரை ஒன்றாய்ச் சேர்த்து எதிரியைத் தடுக்கும் வேலைக்கும் றோமியோ நவம்பர்.

எல்லாவற்றிற்கும் நின்றான். எல்லாப் பாரத்தையும் தானாய்ச் சுமந்தான்.

எப்படிப்பட்டவனை நாம் இழந்துவிட்டோம்.

அனுபவம் மிக்க போர்த்தளபதியாய் ராஜன் நின்றபோதும் அவன் யுத்த களத்தில் இருந்து தள்ளியே வைக்கப்பட்டிருந்தான். எங்கள் தலைவனின் பெருங்கனவுகளின் உறைவிடமாக ராஜன் இருந்தான். யாழ்ப்பாணச் சண்டையில் ஈடுபட்டிருந்த குழுக்களுக்கு உணவு விநியோகம் செய்யும் வேலையை அவனிடம் வலிந்து கொடுத்திருந்ததன் காரணம் அவனை யுத்த களத்தின் முன் முனையிலிருந்து எட்ட நிற்கவைப்பதற்கன்றி, வேறில்லை.

அனுபவம் மிக்க வீரன்.

அவனது அனுபவங்கள் மெய்சிலிர்க்கும் கதைகள்.

ஓய்வில்லாக் கடும் உழைப்பாளி.

அவன் மறையும் போது தலைவரின் பெரும் கனவில் உருவான அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளன். சிறந்த போர் அனுபவங்களை முன்னரே பெற்றிருந்த அவன், இங்கு எல்லா இடமும் இருந்து பொறுக்கி எடுத்த வீரர்களைப் பயிற்றுவித்தான். தன் அனுபவங்களைப் பிழித்தெடுத்துக் கொடுத்தான். போர்க்கலை நுட்பங்களைக் கற்றான் கற்பித்தான். நேர்த்தியான வேலைத்திட்ட ஒழுங்கமைப்பை, கண்டிப்பை, அன்பை, கடும் பயிற்சியை – வியூகங்கள், விநியோகங்கள், வரைபடம்…… என்று எல்லாவற்றையும் கற்றான் கற்பித்தான்.

ராஜன் அமைதியானவன். தன் செயல்களினால் மட்டும் தன்னை அடையாளம் காட்டியவன்; ஆம், செயல்களால் மட்டும்.

எந்த வேலையாக இருந்தாலும் ராஜன் அதிகம் பேசுபவனல்ல. ஏதாவது இராணுவத் திட்டம் தீட்டப்படும் சந்தர்ப்பத்தில், பேசாது பார்த்தபடி – கேட்டபடி இருக்கும் ராஜன், திட்டம் தீட்டப்படுவது பூர்த்தியாவதற்கு முன்னுள்ள இடைவெளியில் பேசுவான். குறிப்பிட்ட திட்டம் செயல் வடிவம் பெறும்போது, அவனது யுக்தியின் பெறுமதி தெரியும்.

தனது கடமையைப் பூரணமாகச் செய்வதில் தன்னை வெளிப்படுத்துவான். எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றைய ஒருவரைக் குறைசொல்வது காண்பதரிது. ‘கடமையைச் செய், பயனை எதிர்பாராதே’ என்பதற்கு உதாரணமாகக் கர்மவீரனாய் விளங்கினான்.

அவனது வரலாறு முழுமையாக எழுதப்பட்டால், அது பெரும் காவியமாகும். இராணுவ வல்லுநர்களால் மட்டுமல்ல, மருத்துவ வல்லுநர்களாலும் நம்பமுடியாத அதிசயமாய் அவன் வரலாறு திகழும்.

எண்ணற்ற தாக்குதல்கள் எண்ணற்ற தோழர்கள் அவன் செய்தவைகள் அவன் பெற்ற அனுபவங்கள் எண்ணி முடியாதவை. எழுத்தில் அடங்காதவை. அவற்றின் கதை சொல்ல, சில தோழர்களும் – பல ஆயுதங்களும் இன்னும் விடுதலைப் போரில்……

அது மட்டுமல்ல, எங்கள் மக்களும், தமிழீழ மண்ணும் மரம்செடி கொடிகளும் அவனைச் சொல்லும். அந்த உறுதியின் உறைவிடம் உலாவிய பூமி எங்களது என்பதைத் தமிழீழம் தலைநிமிர்ந்து சொல்லும்.

நினைவுப்பகிர்வு:
ச.பொட்டு
புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

நன்றி: நெருப்பாற்று நீச்சலின் பத்தாண்டுகள் நூல்

Nom

AnjaneyarTemple,3,ArasadeSithiVinayagar,23,Articles,4,AryankavuAyyappan,5,BharathiSanasamuka.N,2,Canada,2,Canada.M.n.m.o,29,Denmark,10,F.M.P.ThomaiyarOnriyam,12,F.of.G.P.School,4,fr.stjosephsports,2,France,53,Gandhiji.P.School,10,GanthigySanasamuka.N,20,Germany,61,Hindu Samaiya A.s,1,HinduSamaiyaA.s,1,History,2,Hospitel,5,IlaignarSanasamuka.N,5,Italy,1,jana,6,KalaimagalSanasamuka.N,1,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,35,KanchipuramVairavar,4,LiveTv,154,London,11,LurthuMaathaKevi,14,Makkalval,78,mathagal,121,Mathagal NalanPuri.S,14,MathagalNalanPuri.S,9,Net,3,Nunasai.V,54,NunasaiMurugan,26,Obituaries,275,PaanavaddyAmman,28,RajaRajeshwary,7,S.k.kGnanavairavar,7,Sahayapuram,62,SampunathaEswaram,3,SithiVinayagar.P.S,30,SivanKovil,33,St.AntonysChurch,8,St.Joseph,59,St.SebastiansChurch,9,St.Soosaiyappar.C,4,St.Thomas Church,22,St.Thomas.P.School,21,St.Thomas.R.C.G,47,St.thomasunaited,10,stjoseph sports,1,Swiss,11,Udayatharakai.C.C,1,UpputtharavaiVairavar,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,10,Veerapathirar,1,Vigneswara,46,VinayagarSportsClub,32,VipulanantharPadippakam,4,wishes,75,
ltr
item
mathagal.net: சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப். கேணல் ராஜன் அமரர் சோமசுந்தரம் சற்குணம் அவர்களின் 34ஆம் ஆண்டுவீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப். கேணல் ராஜன் அமரர் சோமசுந்தரம் சற்குணம் அவர்களின் 34ஆம் ஆண்டுவீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE32hVFr_-q1ewYsDDfFLtTWQL8_P4VnY4sP4CAQp3vmsEbWCYoLO9I6ADfP9WOeUv4QIZji5GCax1qrEZKZYj_kcoxiBnlQqzso0mpQY8M37QC-e29pPN95b63xnljqg48vGew2MHvBlo20RvjQy_Gs87GwZwSzXtpk1F_UUZCRZzP9zpFnbo7FIsaOla/s1600/34.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE32hVFr_-q1ewYsDDfFLtTWQL8_P4VnY4sP4CAQp3vmsEbWCYoLO9I6ADfP9WOeUv4QIZji5GCax1qrEZKZYj_kcoxiBnlQqzso0mpQY8M37QC-e29pPN95b63xnljqg48vGew2MHvBlo20RvjQy_Gs87GwZwSzXtpk1F_UUZCRZzP9zpFnbo7FIsaOla/s72-c/34.png
mathagal.net
https://www.mathagal.net/2026/08/maaveerar.26.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2026/08/maaveerar.26.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy