யாழ்ப்பாணம் மாதகல் லூர்து மாதாவின் கெபியில் நடந்த ஓர் அருட்சம்பவம் *1949 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 5-ந் திகதி சத்தியவேத பாதுகாவலனில் பிரசுரம்...
யாழ்ப்பாணம் மாதகல் லூர்து மாதாவின் கெபியில் நடந்த ஓர் அருட்சம்பவம்
*1949 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 5-ந் திகதி சத்தியவேத பாதுகாவலனில் பிரசுரம் செய்யப்பட்டது
இற்றைக்கு ஓராண்டளவாய் நரம்புத் தளர்ச்சி காரணமான நோய்வாய்ப்பட்டுப் பிரபல ஆங்கில, சுதேச வைத்திய சிகிச்சை செய்யப்பெற்றும் குணமுறாமையால் கொழும்பு அரசினர் ஆஸ்பத்திரிக்குப் போகுமாறு பலரால் வற்புறுத்தப்பட்டேன். பின், கை கால் அசைக்க முடியாமற் பாயும் படுக்கையுமானேன். பார்க்கவந்தவர் யாவரும் நம்பிக்கையிழந்தனர். ஆயினும் நான் அவர்களுக்கு, "மாசிமாதம் 12-ந் திகதி நடக்கும் மாதகல் லூர்து மாதா சுற்றுப்பிரகாரத்திற்கு நான் நடந்துபோவேன் என்ற நம்பிக்கையுள்ளவனாய் இருக்கின்றேன் " என்று விடையிறுத்து வந்தேன்.
ஒரு நவநாட்செபந்தொடக்கி, "தாயே ஆண்டவரிடமிரந்து, அவசர கருமங்களிலும், ஞாயிறு, கடன் திருநாட்களில் திவ்விய பூசை காணப் பிறர் உதவியின்றி நடந்துபோகவும் அருள்பெற்றுத்தாரும்" என்று இரந்து நின்றேன். நவநாட்கள் தொடங்கியதும் நரம்புகளில் உணர்ச்சி சிறிது சிறிதாக வந்து சுகம்பெறும் அடையாளங்களும் தோன்றலாயின. மாதாமாட்டு என் நம்பிக்கையும் கூடலாயிற்று.
மூன்று மாசகாலமாகப் படுக்கையை விட்டுத் தரையில் இறங்காத நான் 1949-ம் ஆண்டு மாசி மாதம் 12-ந் திகதி சனிக்கிழமை மாலை ஒரு கோலை மாத்திரம் துணைக்கொண்டு, பிற ஆள் ஆதரவின்றி பரிசுத்த லூர்து நாயகியின் திருச்சுரூப சுற்றுப்பிரகாரத்தின் பின்னே திருக்கெபியை நோக்கி ஏறக்குறைய ஒரு மைல் தூரம் நடந்து சென்றேன். கெபியையடைந்து பாவிக்கிரங்கிய பரமதாயாரைப் பரிவுடன் பணிந்து ஸ்துதி கூறி அவவின் திரு அருளை வியந்து நின்றேன். அன்று தொடக்கம் வீட்டிலிருந்து அரைமைல் தூரத்திலிருக்கும் தேவாலயத்துக்கு ஞாயிறு, கடன் திருநாட் பூசைகளுக்குப் போகக் கூடியவனாய் இருக்கிறேன்.
நீ. ச யோசெவ்
மாதகல்.

