கப்டன் ஈழமாறன் (தினேஸ்)- சுப்பிரமணியம் இந்திரகுமார் (மாதகல்-யாழ்ப்பாணம்). 32ம் ஆண்டு நினைவு தினம்..!


1993-சுப்பிரமணியம் இந்திரகுமார் (மாதகல்-யாழ்ப்பாணம்) ….

“டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் வீடுறா… என்ர பெடியள் என்ன மாதிரியோ… விடடா மச்சான்…”

மருத்துவமனையின் கட்டிலில் இருந்தபடி, காலில் குத்திய திருக்கை முள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப்படாதவனாய், தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக் கொண்டிருந்தான் “ஈழமாறன்”. ஆனால் மருத்துவரின் வார்த்தைகள் அவனுக்கு ஏமாற்றத்தையே கொடுக்கும்.

“நஞ்சு உடனே இறங்காது தம்பி. இதால ஆக்கள் செத்துப்போயிருக்கினம். ஒரு இரண்டு நாள் பொறும்! பிறகு போகலாம்.” என புன்னகையை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதை, ஏமாற்றத்துடன் பார்ப்பான் அவன். அதனையும் மீறிப் பொது மகன் ஒருவனின் மிதிவண்டியில் ஏறி பயிற்சி நடக்கும் இடம் வந்து விட்டான். பொறுப்பாளரின் கண்டிப்பான பார்வைதனைக் கண்டு, முகத்தைத் தொங்க விட்டவாறு மீண்டும் மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டது.

கால் நோவு மாறும் முன்னரே மூன்று நாட்களின் பின்னர் பயிற்சிப் பாசறை வந்து, தன் பிள்ளைகளுடன் பயிற்சிகளை மேற்கொண்டான். இவ்வாறான மனவியல்பைக் கொண்டவன் இவன். ஆம்…!

இப் பயிற்சியானது சிங்களப் பேய்களின் பற்களைப் பிடுங்குவதற்காய்…. ஆணவத்தைச் சிதைப்பதற்காய்…. தமிழ் மக்களின் உடல்கள் கடலுடன் கலப்பதை நிறுத்தவதற்காய்… சுமூகமான ஒரு பாதையைத் திறப்பதற்காய்… மேற்கொள்ளப்படுகிறது.

பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான சமருக்காக, ஆண் பெண் போராளிகள் அனைவருமே கடல், தரையெனப் பாராது கடும் பயிற்சிதனை மேற் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவனாய் குழுவின் தலைவனாக ஈழமாறனும்…

மகிழ்வுடன் கடற்கரைதனைத் தழுவி மீளும்-ஆழத்துடன் அழகும் கொண்ட- கடற்கரைதனை அணையாக பெற்ற மாதகல்தனை தனது தாயாகக் கொண்டவன். கடலன்னையின் அணைப்பிலே திளைத்தவன். சுப்பிரமணியம், நாகேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 05.05.1973 இல் இம் மண்ணில் உதித்தான். ஏழு இரத்த உறவுகளையும் இவன் தனதாக்கிக் கொண்டான். தாயக தாகத்தை தனது உயிராகவும் கொண்டான். எப்பொழுதுமே மெல்லிய புன்னகை தன்னை முகத்தில் பரவ விட்டிருப்பான். துடிப்புடன் வளையவருவான். பார்வையினாலே எல்லோர் மனதையும் கவர்ந்து விடுவான். “வெளிநாடு வா” என மூத்த உடன் பிறப்பு அழைத்துக் கூட இவன் தனது உறுதியைத் தளரவிடவில்லை. “அண்ணா நீ தாய்க்காக உழைத்துவிடு, நான் தாய் நாட்டுக்காக உழைக்கப் போகிறேன்” எனக் கூறித் தனது பணியைத் தொடர்ந்தான்.

தொடக்க கல்விதனை மாதகல் “சென். ஜோசப் பாடசாலை”யில் பயின்ற பின்னர், 1984ஆம் ஆண்டு தெல்லிப்பழை ‘மகாஜனாக் கல்லூரி’ யில் தனது கல்வியைத் தொடர்ந்தான். படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டுத் துறையிலும் திறமையாச் செயற்பட்டு கோட்ட மாவட்ட ரீதியில் பல பரிசில்களைப் பெற்று தனது பள்ளிக்கு பெருமை தேடிக் கொடுத்தான்.

இந்திய படையினரின் வல்வளைப்பினால் மனமுடைந்த இவன் தனது சேவை இந் நாட்டுக்கு உடனடியாகத் தேவையெனப் புரிந்து 1990 இல் தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக் கொண்டான். பயிற்சிக்  காலத்தின் போது திறமையாகச் செயற்பட்டு, அனைவரினதும் பாராட்டுக்களைடும் பெற்றான். பயிற்சி தவிர்ந்த ஏனைய நேரங்களில் சக போராளிகளை அருகில் இருத்தி விடுதலைப் போராட்டங்களைப் பற்றி கருத்துக்களை வழங்குவான். பொறுப்பாளரின் வருகையை அறிந்தவுடனேயே தனது குட்டிப் பரப்புரையை நிறுத்திவிடுவான். ஆகையினால் மறைந்திருந்து இவனது பேச்சைக் கேட்டு ரசிப்பார்கள்.

பயிற்சி முடிந்த வேளை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற “யாழ். கோட்டைச் சண்டையில்” ஈடுபடும் வாய்ப்புக் கிட்டியது. திறமையாகச் செயற்பட்டதன் காரணமாக ஏழுபேருக்கு பெறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். உடனடியாகவே காரைநகர் சண்டைக் களம் அவனை அழைத்தது. அதன் பின்னர் மன்னார் பரப்புக்கடந்தான் நோக்கி முன்னேறிய படையினரை எதிர் கொள்ளவென இவனது அணிக்கு அழைப்பு வந்தது. கடும்சண்டை தொடங்கியது. புலிகளின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத சிறிலங்கா படை பின்வாங்கியது.

மீண்டும் சண்டை மூள, ஒரு தோழனை இழக்க நேரிட்டது. மனம் கொதித்த ஈழமாறன் கடுமையான தாக்குதல் தொடுத்தவாறு முன்னேறினான்… எதிரியின் தாக்குதலால் காலிலும், கையிலும் காயமடைந்த இவனை தக்க முறையில் மருத்துவப் பிரிவுக்கு அனுப்பினார்கள் போராளிகள்.

காயம் மாறி முகாம் வந்தவேளை அவனுக்கு எல். எம். ஜி. கனரக ஆயுதம் வழங்கப்பட்டது. அதை எந்த நேரமும் பளிச்சென்று வைத்திருப்பான். தனது வெள்ளைப் பற்களைப் போல…

இவனுடன் பழகிய நாட்களை எடைபோட்டுப் பார்க்கிறேன். அவை மறக்க முடியாதவை. மனதில் இருந்து அகற்ற முடியாமல் ஆழத்தில் கிடந்து என்னுடன் மீட்டல் வகுப்புக்கள் நடாத்தும். அன்றொருநாள், பலாலியைச் சுற்றியுள்ள காவலரண்களில் ஒரு பகுதியில் எமது அணி நிற்கும் வேளை  குறிப்பிட்ட நேரமில்லாமல், தூங்கி விழித்தவுடனேயே எதிரி தாக்குதலை தொடங்கி முடிப்பான். அவ் வேளையில் கன்னத்தை உராய்ந்தபடி, காதைச் ‘செவிடுபட வைக்கும்’ அதிர்வோடு அருகினில் எறிகணை வீழந்த வெடிக்கும். நாம் அனைவரும் பாதுகாப்பினை எடுத்து நிற்கும் போது, ஈழமாறன் மட்டும் தலையை நிமிர்த்தி நிற்பான்.

“தலை போகப் போகுது பதியடா தலையை” எனக் கூறினால் “தலையை எல்லோரும் உள்ளுக்கை வைத்திருந்தால் அவன் வந்து தட்டி எழும்பு என்று தலையில் பிடித்து தூக்குவான்” என்பான். இக் கட்டான நேரங்களிற் கூட நகைச்சுவை உணர்வுடன் உரையாடுவான். இது அவனது இயல்பு.

பலாலி என்றாலே பழவகைத் தோட்டம் கண் முன்னாலே தெரியும்…. இன்றைக்கு எல்லாத்தையுமே எதிரி சிதைத்து நிற்கிறான்…. எமக்கு பசியெடுக்கும் நேரமெல்லாம் பதுங்கி முன்னே சென்று, பழங்கள் பறித்து வந்து உண்பது வழக்கம். கூடவே தினேஷ் வருவான். ஒருநாள் நாம் முன்செல்ல ஆயத்தமான வேளை ஈழமாறனைக் காணவில்லை. “பரவாயில்லை” நாம் போய் வருவோம் எனக் கூறி எமது அணி முன்னேறியது. பழம் பிடுங்குவற்காய்.

மரத்தில் ஏறியாகி விட்டது. பழங்களைப் பறித்து காற்சட்டைப் பையினுள் போட்டுக் கொண்டிருந்த வேளை… சிங்கள உச்சரிப்புக் கேட்டது. மிக அருகில் எதிரி இருப்பதினாலும், அவன் அடிக்கடி வந்து செல்லும் இடமானதாலும், நாம் மெதுவாக சத்தம் செய்யாது மரத்திலிருந்த இறங்கிப் பதுங்கி நின்றோம்…. வரவரச் சிங்கள உச்சரிப்பு மிக அருகிலேயே கேட்கத் தொடங்கியது…. இந்த வேளையில் சண்டை பிடிப்பது எமக்கு இழப்பைக் கூடுதலாகத் தரும் மனதிற் கொண்டு, மிக வேகமாகப் பின்வாங்கினோம். எமது காவலரணில் நிலை எடுத்த நின்று கொண்ட தாக்குதலுக்குத் தயாரானோம். ஈழமாறனும் லெப்டினன்ட் சித்துவும் சரித்தபடி… எமது செருப்புக்களை எடுத்துக் கொண்டு… சிங்களம் கதைத்து… எம்மை வெட்கப்பட வைத்துவிட்டார்கள். நிலமையை ஒரு நொடியில் உணர்ந்து கொள்ள அசடு வழிந்தபடி அவர்களுடன் சேர்ந்த சிரித்தோம். இப்படி இவனது குறும்புகளைக் கூறிக் கொண்டே போகலாம்.

ஆறுமாதப் பிணைப்பால் ஒன்று பட்டு எமது பணி தொடர்ந்த வேளையில், வேறிடம் வரும்படி அழைப்பு வந்தது… எமது துயர்களைப் பகிர்ந்து கொண்டு அவனுக்கு விடை கொடுத்தோம். கரும்புள்ளியாக அவன் மறையும்வரை கைகளை அசைத்த விடை கொடுத்தோம். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து இலட்சியம் என்னும் பிணைப்பால் ஒன்றுபட்ட எங்களது அன்பு வார்த்தைகளால் வரைந்து விட முடியாது.

பிரிந்து சென்ற அவன் “மின்னல்” தாக்குதலில் ஏ.கே. எல்.எம்.ஜி. கனரக ஆயுதத்திற்கு உதவி இயக்குனராகச் சென்றான். மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாகச் சண்டை நடைபெற்றது. எதிரி தனது முப்படைகளினதும் உதவியுடன் கடுமையாகத் தாக்கினான்…. ஆனால் எம்மிடமோ அசைத்துக் குலைக்க முடியாத உறுதி பக்க பலமாக இருந்தது.

இங்கும் அவனது தலை வீரத்தின் வடு ஒன்றினை ஏற்றுக் கொள்கின்றது… அவனது உடலில் காணப்படும் ஒவ்வொரு தழும்பும் ஒவ்வொரு சண்டைதனைப் பறை சாற்றி நிற்கும்… அவனது குருதியை எத்தனை முறை இந்த மண்மாதா ஏந்தியிருப்பாள்… நினைத்துப் பார்க்கிறேன்… காயம் ஆறிய பின்னர் இவனுக்கு மருத்துவ வீடு கடமை செய்யெனக் கூறியது… அன்பாகவும், பண்பாகவும் அதேவேளை வேதனையுடன் முனகும் போராளிகளுக்குத் தாய்குத் தாயாகவும் நின்று அரவணைப்பினையும் வழங்கியவன். சில காலங்களின் பின்னர் மீண்டும் அவனுடன் சேரும் வாய்ப்புக் கிட்டியது.

பசறையில் பயிற்சி வழங்கப்பட்டது… மகிழ்வுடன் பொழுதுகளைக் கழித்தோம். உடலலுப்பின் காரணமாக கடமை நேரத்தில் சிறிது கண்ணயர்ந்து விட்டான் ஈழமாறன். இவனுடன் யசி என்ற போராளியும் தான்…! “நித்திரை எமக்கு எதிரி. அதனால ஏறுங்கோ தென்னை மரத்தில” பொறுப்பாளரின் கண்டிப்பான குரல். இருவரும் மரத்தில் ஏறிவிட்டனர். ஆனால் அங்கும் அவனது குறும்புகள் நின்று விடவில்லை. சிரித்தபடியே மரத்திலிருந்து இளநீர் குடித்தான். கீழே நின்றவர்களுக்கும் போட்டான். அவனது இச் செயல்களால் அவனிடம் கோபம் பறந்து போக, இறக்கப்பட்டு பயிற்சிக்கு அனுப்பப்பட்டான்.

இவ்வாறு தான் செய்யும் சிறு தவறுகளாயினும் பெறும் தண்டனைகளை மகிழ்வுடன் ஏற்றுச் செய்யும் நிலை, அவனுக்கே உரியது தான். எமது கொட்டில் கலகலப்பாக இருக்கிறதென்றால் அங்கு தினேஷ் இருப்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும்.

நாம் அனைவரும் செல்லமாகச் “சம்மாட்டி” என்றுதான் அழைப்போம். அதற்கு ஒருநாளும் கோபித்தது கிடையாது. மெல்லிய புன் சிரிப்புடன் சென்றுவிடுவான். அராலித் துறையருகே இவனது அணி நின்றபோது, பிறந்த மண் எதிரியால் சூழப்படுகிறது. கொதித்தெழுந்த அவன்… தனது கடைசித் தங்கை மேகலாவை எண்ணி மிகவும் துயரமுற்றான். வீட்டில் தாயிடத்தும், கடைசித் தாங்கையிடமும் தான் இவனது பாசப்பிணைப்பு இறுகியிருந்தது. “என்ர கடைசித் தங்கச்சிக்கு ஒண்டு நடந்தா என்ர உயிரையே விட்டிடுவனடா, அவள் தான்ரா என்ர உயிர்” என்று தங்கை மீதுள்ள அன்பின் ஆழத்தை தனது சக நண்பனிடம் கூறி வைப்பான்.

மக்களின் போக்குவரத்திற்காகப் பயன்பட்ட கொம்படிப் பாதைதனை மூடிவிடும் நோக்கில் மக்களின் உணர்வைச் சிதைக்கும் நோக்கிலும் எதிரியானவன் “பலவேகய – 2” எனப் பெயர் சூட்டப்பட்ட தாக்குதல் ஒன்றை மேற்கொண்டான். அங்கும் முளைத்தான் ஈழமாறன். இரண்டாம் நாட் சமரில் அவன் அடித்த ரவைகளின் எண்ணிக்கை ஐந்து தான். “ஏன்ரா மச்சான் அடிக்கையில்லை?” எனக் கேட்ட நண்பனிடம் “இயக்கம் படுற கஸ்டத்தில கண்டமாதிரி அடிக்கக் கூடாது… ஒவ்வொரு தோட்டாவும் வாங்க இயக்கம் எவ்வளவு கஷ்ரப்படுகுது தெரியுமா?” என, தனது சொற்பொழிவைத் தொடங்கி விட்டான்.

ஆம்…. எதிரியானவன் சம்பளத்திற்காக வருபவன். அரசாங்கம் கடன்பட்டு வாங்கும் ஆயுதத்தை அவன் கண்டபடி அடிப்பான். கிலி கொண்டு அடிப்பான். ஏனென்றால் அவனுக்கு தன்னுயிர் முக்கியம். விடுதலைப் புலிகள் அப்படியல்ல. சண்டை நேரத்தில் கூட நிதானமாகச் செயற்பட்டு எவ்வளவு மீதப்படுத்த முடியுமோ அவ்வளவு மீதப்படுத்தி, எவ்வளவு அவனிடம் எடுக்க முடியுமோ அவ்வளவையும் எடுத்துக் கொண்டு வருவார்கள். “இலட்சியம் ஒன்றுதான் எங்களின் உயிர்….. அதற்காக நம் உயிர் போவது கூட எமக்குக் கவலையைத் தராது….”

சண்டை முடிந்தது துயரங்களை மனதில் தாங்கியவாறு சக தோழர்களின் சில உடல்களைத் தோழில் சுமந்தவாறும் மீளுகின்றோம்.

பழைய முகாம் களை கட்டுகிறது. “இனிப்புச் செய்வோமடா”. ஒரு நண்பன் கேட்க, “ஓம் நான் நல்லாச் செய்வேன். தேவையானவற்றைக் கொண்டுவாங்கோ” எனக் கூறியபடி அடுப்பு வேலைக்கு அயத்தமானான் ஈழமாறன். சீனி, தேங்காய், மா வெனச் சேகரிக்கப்பட்டு வேலைகள் தொடங்கின. அடுப்பருகே இருந்த சட்டியில் பாணியை கிளறி விட்டுக் கொண்டிருந்தான் அவன். காதைச் செவிடுபடுத்துபடியாக எங்கிருந்தோ ஒர் ஷெல் வந்து விழுந்தது. போட்டதை அப்படியே போட்டுவிட்டு பாதுகாப்புத் தேடிய பின்னர் மீண்டு வந்து பார்த்தபோது, சட்டியில் இனிப்பு கறுப்பாக இருந்தது. அனைவரும் சேர்ந்து அதனைக் கேலி செய்யத் தொடங்கி விட்டார்கள்.

“டேய் எனக்கென்ன செய்யத் தெரியாதோ…? கொண்டுவா, உங்களுக்கு இனிப்பு தந்தால் சரிதானே…?” மீண்டும் வேலைகள் ஆரம்பமாக சுவையான இனிப்பினை எல்லோருக்கும் வழங்கினான். சமையலிலும் தான் சளைத்தவன் அல்ல என்பதையும் தன்னால் செய்யமுடியும் என்ற அவனின் திடத்தையும் எண்ணிப் பார்க்கிறேன். இன்றும் அவன் தன் கையால் வழங்கிய இனிப்பின் சுவை என் நாவில் தித்திக்கிறது. அவனை இழந்த வேதனை நெஞ்சின் ஓரத்தே முள்ளாய் நெருடுகின்றது.

அன்று ஒரு நாள், கடும் பயிற்சிக்குப் பின்னர் பல மாத வேவுப் பணியின் பின்னர் – தாக்குதல்த் திட்டம் தீட்டப்படுகின்றது. 10.11.93 நள்ளிரவு புலிவீரர்களின் அணி புயலெனப் பாய்கிறது. சிதறி ஓடும் சிங்களப் படையதனின் சிரசில் வெடி பாய்கிறது. கடலில் பாயும் கோழையவன், கடற்புலிகளால் மடிகிறான். உதவிக்கு வந்த வானூர்திகள் குண்டுகளை எங்கே தட்டுவது என்று தெரியாது கடலில் கொட்டுகிறது. வானூர்தி எதிர்ப்பு ஒருபுறம் முழங்க கரும்பச்சை பேய்களைத் தரையிலே எதிர்க்க, நீல ஓநாய்களைக் குருதிக் கடலிலே சிதைக்க, எங்கும் புகைமயமாக இரத்தவாறு நிலத்திலே ஓடிக் கடலில் கலக்கிறது….. தமிழ் மக்களின் குருதியைக் கலந்திட வைத்த கறுப்பு நாய்களின் உடல்கள் பல மிதந்து சென்றன. அதே உப்பாற்றின் மீது…

சடுகுடு விளையாடுவதைப் போல் மிக அருகிலேயே நெருக்கமாக நின்று போரிடும் தன்மை அங்கு காணப்பட்டது. செய்வதறியாது திகைத்த எதிரி கடலில் பாய்ந்து நிற்கவும் தொடங்கினான். அங்கும் அவனுக்கு சாவுப்பாடை கட்டப்பட்டது.

“அண்ணை குறிப்பிட்ட இடத்தைப் பிடிச்சுப்போட்டுத்தான் உங்களுக்குத் தொடர்பு எடுப்பன். இது சத்தியம்.” உறுதியாகத் தளபதியின் கையில் அடித்துவிட்டுத் தனது அணியுடன் மின்னலென உள்ளே நுழைகிறான்.

குறிப்பிட்ட நேரம் தாண்டியும் அவனது அவனது தொடர்பு கிடைக்காதவிடத்து சக நண்பன் தொடர்பினை எடுக்கிறான். அங்கே… அங்கே… கடைசியாத் தனது உடலில் உள்ள குருதி அனைத்தையும் தமிழ் மாதாவுக்கு அர்ப்பணமாக்கிவிட்டு, பூநகரி மண்மீது வீழ்ந்து கிடக்கிறான் வீரமறவன்…. அவனது தொலைத் தொடர்பு கருவி மட்டும் தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தது.

“அண்ணை எனக்கு தந்ததைப் பிடிக்காமல் திரும்பி வரமாட்டன்” அவனது உறுதி கலந்த குரல் காற்றினிடை ஒலிக்கின்றது.

அன்றொருநாள் எனது நாட்குறிப்பில், “என்ர நினைவாக இதை எழுதிறன் மச்சான். நான் செத்தாலும் இதை ஞாபகமாக வைத்திரு என்ன?” என்ற படி எழுத ஆரம்பித்தான்.

“நாம் அனைவருமே பல கொடியில் பூத்த மலர்கள். காலம் இட்ட கட்டளையால் எதிர்த்துப் போராட மாலையைச் சேர்ந்தவர்கள். பிரிவு எம்மை ஆட்கொண்டாலும் எமது தலைவனின் இலட்சியப் பாதை உறுதி தளராது”



இப்படிக்கு


தினேஷ்

அவனது இவ்வரிகள் என் இதயத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.



“ஓமடா தினேஷ், இலட்சியப் பாதை எண்டைக்குமே உறுதி தளராது.!”

நினைவுப்பகிர்வு:- த.பாரதி.

விடுதலைப்புலிகள் (ஆவணி, புரட்டாதி 1994) இதழிலிருந்து தேசக்காற்று.

( trttamilolli இணையத்தில் இருந்து.)

Nom

AnjaneyarTemple,2,ArasadeSithiVinayagar,20,Articles,4,AryankavuAyyappan,5,BharathiSanasamuka.N,2,Canada,2,Canada.M.n.m.o,24,Denmark,9,F.M.P.ThomaiyarOnriyam,11,F.of.G.P.School,3,fr.stjosephsports,1,France,48,Gandhiji.P.School,8,GanthigySanasamuka.N,19,Germany,53,HinduSamaiyaA.s,1,History,1,Hospitel,3,IlaignarSanasamuka.N,5,Italy,1,jana,7,KalaimagalSanasamuka.N,1,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,32,KanchipuramVairavar,4,LiveTv,146,London,9,LurthuMaathaKevi,12,Makkalval,76,mathagal,104,Mathagal NalanPuri.S,14,MathagalNalanPuri.S,6,Net,3,Nunasai.V,47,NunasaiMurugan,22,Obituaries,222,PaanavaddyAmman,23,RajaRajeshwary,7,S.k.kGnanavairavar,6,Sahayapuram,55,SampunathaEswaram,3,SithiVinayagar.P.S,25,SivanKovil,31,St.AntonysChurch,7,St.Joseph,54,St.SebastiansChurch,8,St.Soosaiyappar.C,3,St.Thomas Church,18,St.Thomas.P.School,19,St.Thomas.R.C.G,39,St.thomasunaited,8,stjoseph sports,1,Swiss,9,Udayatharakai.C.C,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,9,Veerapathirar,1,Vigneswara,43,VinayagarSportsClub,29,VipulanantharPadippakam,3,wishes,62,
ltr
item
mathagal.net: கப்டன் ஈழமாறன் (தினேஸ்)- சுப்பிரமணியம் இந்திரகுமார் (மாதகல்-யாழ்ப்பாணம்). 32ம் ஆண்டு நினைவு தினம்..!
கப்டன் ஈழமாறன் (தினேஸ்)- சுப்பிரமணியம் இந்திரகுமார் (மாதகல்-யாழ்ப்பாணம்). 32ம் ஆண்டு நினைவு தினம்..!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgirEXAtYvLZOXlDERG5WwS29h5b9zL-1X4StRgoKlRcyhASqfu9rpoadjhgUqh78o_BiGazX77gEd7oH7QWZrzPN64b-DjKP2og8mYdOELDdOjVUOX2YYo6sWgqSrMxbi46-kpBBoxTtMB/s16000/Kapdan-Eelamaaran-copy%255B1%255D.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgirEXAtYvLZOXlDERG5WwS29h5b9zL-1X4StRgoKlRcyhASqfu9rpoadjhgUqh78o_BiGazX77gEd7oH7QWZrzPN64b-DjKP2og8mYdOELDdOjVUOX2YYo6sWgqSrMxbi46-kpBBoxTtMB/s72-c/Kapdan-Eelamaaran-copy%255B1%255D.jpg
mathagal.net
https://www.mathagal.net/2025/11/maaveerar32.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2025/11/maaveerar32.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy