முரல் மீன், தேறை மீன் சுவையில... இலங்கை, யாழ் பண்டத்தரிப்பில் 13/10/2022 வெள்ளி காலை நிகழ்ந்த 'கலாச்சார விழா - 2022' நிகழ்வில் '...
முரல் மீன், தேறை மீன் சுவையில...இலங்கை, யாழ் பண்டத்தரிப்பில் 13/10/2022 வெள்ளி காலை நிகழ்ந்த 'கலாச்சார விழா - 2022' நிகழ்வில் 'கலாதரம் - 2022, இதழ் - iv' எனும் பயனுள்ள இலக்கியச் சிறப்பு நூலை வலி தென் மேற்குப் பிரதேசக் கலாச்சாரப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து வெளியிட்டு வைத்தது. அந்நூலிற்கான மதிப்பீட்டுரையை திரு.ந.குகபரன் அவர்கள் வழங்கியிருந்தார். அவரது மதிப்பீட்டுரை சிறப்பாக அமைந்திருந்ததாக அரங்கப் பார்வையாளர்கள் தமக்குள் பேசிக்கொண்டனர். அந்நூலில் இடம்பெற்ற 'முரல் மீன், தேறை மீன் சுவையில...' என்ற எனது பதிவையும் அலசிப் பாராட்டி உள்ளார்.மாதகல் கடற்பகுதியில் மாசி மாத இரவில் முரல் மீனும் புரட்டாதி மாத இரவில் தேறை மீனும் பிடிக்கப்படுகிறது. அதன் சுவை அவற்றை அடிக்கடி வேண்டிச் சாப்பிடத் தூண்டும். அந்த வகையில் திருமணம் பேசும் தரகர் பேச்சு எப்படியென்று பார்ப்போம்.தரகர்: நல்லதொரு சம்பந்தம், அருமையான பொடியன், மாதகல் வடலி ஆஸ்பத்திரியில டாக்குத்தர். கை நழுவிப் போகாமல் உங்கட பிள்ளைக்குச் செய்யப் பாருங்கோவேன்.பெண் வீட்டார்: எங்கட பெட்டையும் உலக அழகு ராணிகளை விட வடிவானவள் கண்டியோ! சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் தரம்-1 கணக்காளராக வேலை செய்கிறாள். அவளுக்கு ஊரோட வீட்டோட இருக்கிற மாப்பிள்ளை வேண்டுமாம்.தரகர்: பொடியன் பட்டணத்து வாழ்க்கையை வாழ்ந்திட்டு, மாதகலூருக்க இரு என்றால் திருமணம் செய்ய மாட்டான். பட்டணத்தில வீடு, BMW கார், ஒரு கோடி காசோட பிள்ளைக்கு ஐம்பது பவுண் நகையும் போட வேணுமாம். அப்ப தான் பொடியனை வளைச்சுப் போடலாம்.பெண் வீட்டார்: எங்கட பெட்டைக்கு முரல் சொதியோட தான் புட்டுத் தொண்டைக்க இறங்கும், தேறைச் சொதியோட தான் இடியப்பம் விழுங்குவாள். சோற்றோட மாதகல் கீரை, வல்லாரை, திருக்கை வறை, சுறா வறை என்ற ஊர்ச் சாப்பாட்டுச் சுவை பட்டணத்தில கிடைக்குமோ? அதனாலே, வீட்டோட மாப்பிள்ளை ஊரோட இருப்பரென்றால் கூட்டி வாங்கோ… கேட்கிற சீதனம், ஆதனம் தரலாம்.தரகர்: இப்படிப் போடு போடுறியளே! அவர் எங்கே சம்மதிக்கப் போறார். என்ர பிழைப்பில மண் அள்ளிப் போடுறியளே!பெண் வீட்டார்: மாசியில முரல் சொதியோட புட்டுச் சாப்பிடத் தாறோம். புரட்டாதியில தேறைச் சொதியோட இடியப்பம் சாப்பிடத் தாறோம். உன்ர மாப்பிள்ளை என்ர பெட்டையின்ர சமையலில சாப்பிட்டதும் அவள் காலில விழுந்கிடுவாரே! உன்ர சோலியும் முடிஞ்சிடும். வீட்டோட நாங்களும் மாப்பிள்ளையை மடக்கின மாதிரி இருக்கும்.ஆக்கம்: யாழ்பாவாணன் (காசி.ஜீவலிங்கம்).மாதகல் கிழக்கு, மாதகல்
மாசிமாதம் எண்டாலே மாதகல் முரல்மீனுக்கு நாக்கு தவியா தவிச்சிடும்...
ஓம் என் அன்பு மனைவீட பிறந்தகிராமம்...
மாசிமாதம் வந்திட்டா பட்டுவோட அம்மப்பா சொல்லிட்டு திரிவார் தம்பி ஒரு நாளைக்கு முரல் வாங்குவம் எண்டு ஆனா என்ன விலையெண்டாலும் அஞ்சாறு நாள் வாங்கீடுவார்...
சரி வாங்கோ கடக்கரைக்கு போவம்...
அங்க தம்பி மார் கூம்பு வலைய கொண்டு ஏழுமணிக்கு கடலுக்கு போவினம் ஒரு ரெண்டுகடல் மைல் தூரம் போக நேரம் சரியா இருக்கும்...
அப்ப பாத்து இழம் முரல் மீனுகள் வெளிச்சத்துக்கு துள்ளி பாய்வினம் அந்த நேரத்தில கச்சிதமா வலைய வீசி அள்ளீடுவாங்கள் தம்பி மார்...பிறகு ஒரு எட்டுமணி மட்டில கரைக்கு வரவே வாங்கின மீன் மாயமாகீடும்...
அவைக்கு அவ்வளவு கிராக்கி....
சரி மீனை வாங்கிக்கொண்டு வீட்டை ஓடி வந்து மீனை கோடிப்பக்கம் கொண்டுபோய் ஒரு சட்டீல போட்டு அலசீட்டு அரிவாளில இருந்து செதில் அடிச்சு செட்டைய மண்ணில தடவி(வழுக்காம இருக்க) வெட்டி சொண்டையும் வெட்டி போட்டு பூவோட சொட்டு மேல் குடல உருவீட்டு வயித்த நெரிச்சு சரிமானகடையல உருவிட்டு நல்லா நாலு தண்ணீல அலசி கழுவினா மீன் சமையலுக்கு தயார்...
சரியெண்டு குசுனீக்க போனா மனிசி சின்னவெங்காயம் இரு இருவது பல்லு ரெண்டா பிளந்த பச்சமிளகாய் ஒரு பத்து ஒரு தேங்காயில புழிஞ்சரரெண்டு வகை பால்(முதல் பால் கப்பிப்பால்) தயாரா இருக்கும்... அங்கால வெள்ளை புட்டு சிவத்தை புட்டு இடியப்பம் எண்டு அதுவும் சைட்டா கமகமத்துக்கொண்டு வேகும்....
இப்ப பெரிய மீன் ஒரு பதினஞ்சு முழுசா சொத்திக்கு எடுத்து வைச்சிட்டு பிஞ்சு மீன் ஒரு இருவது பொரியலுக்கு...
நான் அளவா உப்பு மஞ்சல் தூள் போட்டு பொரியல் மீனை பிரட்டி வடிய போட்டிருவன்....
அதுக்கு பிறகு கணக்கான மண்சட்டி ஒண்ட அடுப்பில வைச்சு அதுக்க
வெட்டின வெங்காயம் மிளகாய் ரெண்டு பேணி கப்பிப்பால விட்டு மூடி போட்டு வேக விடுவன்... அதுக்க இதமான ரெண்டு பாட்டு பாட விட்டிருவம் பட்டுவும் அம்மப்பாவும் அம்பது தடவை குசுனீக்க வந்து நோட்டம் விட்டிட்டு போவினம்...
சரி இப்ப மூடிய திறந்து உப்பு அளவா போட்டு மெல்ல மீனை அடுக்கு கப்பி பால முழுவதையும் விட்டு திறந்த படி மீனை வேக விடுவம்... முரல் வாசம் மூக்கை துளைக்கும் அப்பிடியே மனிசீட முகத்தை பாத்து லைட்டா சிரிச்சா காதலும் கூடவே ருசி சேர்த்திடும்... கொதிச்சு வர முதல் பாலை விட்டு அதில புற அகப்பையால மஞ்சல் தூள அமத்தி சாடயா துலாவிவிட்டா ஒரு தரம் கலர் வரும் பாருங்கோ...
இப்ப ஒரு கொதியோட சொதிய இறக்கி அதுக்க ரெண்டு தேசிக்காய வெட்டி நல்லா புழிஞ்சு புழி விட்டா ஆ சொதி அசத்தீடும்... லைட்டா உள்ளங்கைல சுடச்சுட விட்டு நக்கினா அடடே அமிர்தமெல்லோ
மனிசியும் ஓரமா கைய நீட்டுவா கொஞ்சமெடுத்து ரொம்ப ஊதிட்டு அவவிட் கையில விட்டா ஒரு குட்டிக்கையும் மேல நீளும் ஆருமில்ல பட்டுவோட குட்டிக்கை...
சுடுமாத்தை மெல்ல எண்டு சொல்லு பக்குவமா அவாக்கு ஒரு சொட்டு மருந்து...
பிறகு அடுப்பில ஒரு தாச்சி சட்டிய வைச்சு நல்லா காய விட்டிட்டு செக்கில ஆட்டின நல்ல நல்லெண்ணை மீனை மூடுற அளவுக்கு விட்டு கொதிக்க வைச்சிட்டு உப்பு மஞ்சல் ஊறி வடிஞ்ச மீனில ஒரு அஞ்ச ஒண்டா மெல்லமா அடுக்கி மூடிவிட்டா டுப்பு டுப்பு எண்ட சத்தத்தோட தரமா பொரிஞ்சுவர மெல்ல அகப்பையால பிரட்டி விட்டு மத்தப்பக்கமும் பொரிய விட்டு எடுத்தா மீன் பொரியலு ரெடி... அப்பிடியே எல்லாரும் நான் மனிசி பட்டு அம்மப்பா தங்கச்சி எல்லாரும் ஒண்டா இருந்து புட்டு நிறைய சொதி ரெண்டு சொதி மீன் ரெண்டு பொரியல் எண்டு போட்டு வெளுத்து கட்டுறப்ப சொர்க்கத்துக்கு ஒரு விசிட் அடிச்சிட்டு வரலாம்... இப்ப சீசன்... வாழ்க்கை வாழ்வதற்கே ஆதலால் நீங்களும் வாழ்ந்திடுங்கள் தோழர்களே...
அன்புடன் கலைவாணன்
மாதகல் கடற்கரையை அண்டி வருடம் தோறும் மாசி மாதத்தில் வரும் மாசி முரல் மீனவர்களால் பிடிக்கப்பட்டு இரவு 7:30 மணி முதல் மாதகல் கடற்கரையில் விற்பனையாகின்றது, இந்த ஆண்டும் வழமையாக பிடிக்கும் மாசி முரல் இரவு 7:30 தொடக்கம் 10:00 மணிவரை மாதகல் கடற்கரைக்கு சென்றால் நீங்களும் வாங்கலாம். இந்த சிறிய வகையான முரல் சொதிக்குள் போட்டு அல்லது பொரிச்சு சாப்பிட நல்ல ருசியாக இருக்கும், மாதகலுக்கு போறது கிட்டவாக இருந்தால் இரவு 7:30 மணிக்கு மாதகல் கடற்கரைக்கு சென்றால் துடிக்க துடிக்க முரல் வாங்கலாம்
Lanka4 Kilinochchi
“முரல் மீன்”. மூசிப் பெய்யும்
மாசிப் பனியில்
முரல் மீன் வலையில்
திரளாய் தேறும்.
காசி அண்ணன்
மீன் கோன் ஓசை
காலை தோறும்
தெருவில் கூவும்.
கட்டிய பெட்டியுள்
கனக்கும் மீனுடன்
களைக்க களைக்க
சைக்கிளில் வருவார் பள்ளிக்கு கிளம்பும்
பரபரப்பிடையே
படலைக்கு விரையும்
துள்ளல் ஓட்டம்.
எண்ணித் தருவா
அம்மா காசை
எட்டுச் சதம்தான்
ஒரு மீன் காலம்.
சட்டிக்குள் எண்ணி
சட்டென போட்டு
ஜட்டி பைக்குள்
காசை இட்டு
எட்டி விழக்குவார்
எதிர் படலைக்கு.
மதியம் வருவோம்
மணக்கும் பொரியல்
சொதிக்குளும் துண்டு
சோறே இனிக்கும்.
தீயல் ,பொரியல்
ஆயன எல்லாம்
அம்மா கைப்பட
அருஞ்சுவை ஆகும்.
ஒட்ட சட்டியில்
உள்ளவை எல்லாம்
வட்டமாய் இருந்து
வயிராற உண்போம்.
எல்லாம் வழித்து
எமக்குத் தருவா
எதிரே இருந்து
புசிப்பதை ரசிப்பா.
சோறு வெறும் சொதி
மீதம் இருக்கும்.
எம் பசி தீர்த்து
எழுந்த திருப்தியில்
உண்பது நிறைவு
என்றே என்றும்
எமக்காய் வாழ்ந்த
எங்கள் அம்மாவை
நினைத்தால் கண்ணில்
நீர் ஊற்றெடுக்கும்.
முரல் மீன் ருசியும்
முற்றுப் பெற்றது.
அம்மை அப்பனாய்
அப்பா இறந்தும்
எம்மை ஆள் ஆக்கிய
எங்களின் தெய்வம்.
கைமாறு எதுதான்
கடனைத் தீர்க்கும்.?