காந்தி ஐயா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகின்ற பொண்னம்பலம் கந்தையா அவர்களின் 105வது ஜனன தினம்..!

--------------------------------------------------
காந்தி ஐயா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகின்ற பொண்னம்பலம் கந்தையா அவர்களின் 105வது ஜனன தினம் (19.12.2023)இன்றாகும். இவர் 03.02.2017 அன்று தனது 99வது வயதில் இறைபதம் அடைந்திருந்தார்.
பல சமயப்பணிகளிலும் சமூகப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வந்த திருகோணமலையின் மூத்த மகன் என போற்றப்படும் பொ. கந்தையா (காந்தி ஐயா) யாழ்ப்பாண மாவட்டத்தில் மாதகல் என்னும் கிராமத்தின் மேற்குப்பக்கமாக அமைந்துள்ள நுணைசை முருகமூர்த்தி கோவிலடியைச் சேந்த பொன்னம்பலத்திற்கும் - நன்னிப்பிள்ளைக்கும் 2வது மகனாக 1918ம் ஆண்டு மார்கழி மாதம் 19ம் திகதி பிறந்தார்.
இவர் தனது ஆரம்ப கல்வியை தற்போது முருகமூர்த்தி வித்தியாலயம் என்று அழைக்கப்படுகின்ற மாதகல் அமெரிக்க மிஷன் பாடசாலையில் 5ம் வருப்பு வரை கற்று பின்னர் 6ம் 7ம் வகுப்பினை பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையில் 8ம் வகுப்பினையும், மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் பண்டிதர் க.பொ.இரத்தினம் அவர்கள் அதிபராக இருந்த காலப்பகுதியில் 9ம் வகுப்பினையும் கற்று ஆசிரியர் தரதரப்பதிரத்திலும் தேர்ச்சி பெற்று அப்பாடசாலையிலேயே உதவி ஆசிரியராக சேர்ந்தார்.
எனினும் வவுனியாவில் உள்ள கருங்காலிக்குளம் அரசினர் பாடசாலையில் முதன் முறையாக 1938ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி நியமணம் பெற்றார் அப்போது இப்பாடசாலையில் 27 மாணவர்கள் கற்றனர். இதன்போது சம்பளமாக 43.00 ரூபா பெற்றார். தொடர்ந்து 1939ம் ஆண்டு மட்டக்களப்பு ஏறாவூர் அரச பாடசாலையிலும் 1943 ம் ஆண்டு திருகோணமலை பெரிய கிண்ணியா அரச பாடசாலையிலும் 1946ம் ஆண்டு திருகோணமலை தாமரைவில்லில் புதிய அரசினர் பாடசாலை ஒன்றை தொடங்கி தனது பணியை தொடர்ந்த காந்தி ஐயா தொடர்ந்து திரியாயிலும் அரச பாடசாலை ஒன்றை தொடங்கி சேவையாற்றியிருந்தார்.
பின்னர் 1947ம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் கக்கல அரசினர் பாடசாலையில் சேவையாற்றி அரச சேவையில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்தார்.
இருப்பினும் ஐயாவினுடைய சேவை மாணவர் சமுதாயத்திற்கு தேவை என்று கருதிய கல்வி அதிகாரி திரு.சந்திரசேகரம் அவர்கள் கொக்குவில் இராமகிருஷ்ண மிஷன் சைவ வித்தியாலயத்தில் சேவை செய்ய ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனால் 1947ம் ஆண்டில் இருந்து 1951ம் ஆண்டு வரை அங்கு சேவையாற்றி பின்னர் 01.01.1952ல் திருகோணமலை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து தொடர்ந்து 1954ம் ஆண்டு தம்பலகாமம் இராம கிருஷ்ண மிஷன் பெண் பாடசாலையிலும் பணியாற்றி மீண்டும் 1955ம் ஆண்டு திருகோணமலை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து 1961ம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார்.
இறுதியாக திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியர் பாடசாலைக்கு 1961ல் இடமாற்றம் பெற்று 43வது வயதில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதற்கிடையில் 1953ம் ஆண்டு இராசநாயகி என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்து 1955ம் ஆண்டு கதிர்காமநாதன் என்ற மகனைப் பெற்றெடுத்து பல பட்டங்கள் பாராட்டுகள் கிடைத்தபோதும் எவற்றையும் தன் பெயரின் முன் சேர்க்காமல் எளிமையாக காந்தியின் வழியில் திருகோணமலை முத்துக்குமார சுவாமி கோவிலின் முன்பாக அமைந்துள்ள சிறிய வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் சுகவீனம் காரணமாக 03.02.2017 அன்று இறை பணிக்காக இறைவனடி சேர்ந்தார்.





பொ. கந்தையா (காந்தி ஐயா) அவர்களின் 6வது ஆண்டு நினைவுநாள் (03.02.2023)
சமூக சேவையாளர் பொ. கந்தையா (காந்தி ஐயா)
ஆழக்கடலோரம் சூழும் அலை வந்து தீண்டும் மணல்விரிப்பில் இருந்த ஒற்றைப் பனைமரத்தின் அழகும், முற்றவெளிப்புற்தரையில் மேயும் மான்கள் துள்ளிவிளையாடும் தனி அழகும், அந்தக்காலத்தில் இருந்த திருகோணமலை நகரின் தனித்துவங்கள்.
அதனைப் போலவே இந்துக்கல்லூரியும் அதன் முற்புறத்தில் இருந்து பார்க்கத் தெரியும் திருக் கோணேஸ்வரமும், அந்தக் கல்லூரி கடந்து வீதி தாண்டி அருள்வீசும் காளி கோவிலும், இந்தக் காலத்திலும் இருக்கும் திருகோணமலை நகரின் மகத்துவங்கள்.
அவைகளைப் போலவே எங்கள் திருகோணமையில் தனித்துவமும் மகத்துவமும் ஒருங்கே கொண்ட மகாபுருஷர் ஒருவர் காந்தியின் காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியவாதியாக வாழ்ந்த பொ.கந்தையா என்ற ஓய்வு நிலை ஆசிரியர் ஆவார்.
எங்கள் மண்ணில் வாழ்ந்த எல்லோராலும் காந்தி ஐயா என அன்பாக அழைக்கப்பட்ட அவர், பல சமயப்பணிகளிலும் சமூகப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி எங்கள் திருகோணமலை மண்ணில் பல சேவைகளை செய்து வந்தவராவர்.
மாதகலில் பிறந்து எங்கள் திருகோணமலையில் வாழ்ந்து எம் மண்ணுக்கு சொந்தக்காரரான
ஐயாவை பற்றி அவர் உயிருடன் இருக்கும் போதே எழுதும் வாய்ப்பு அவரது 99தாவது அகவை தினத்தை வாழ்த்தும் போது எனக்கு கிடைத்து இருந்தது.
எனது அந்தப் பதிவில் நான் ஐயாவைப் பற்றிக் குறிப்பிடும் போது பிரமிக்க மட்டுமே தெரிந்த என் பிஞ்சு வயதில் இருந்தே ஐயாவை எனக்கு தெரியும் என்பதையும் அவரது மனைவியார் திருமதி கந்தையா என்ற இராசநாயகி ஆசிரியை அவர்களே எனக்கு தமிழ் கற்று தந்தவர்கள் என்பதையும் பதிவு செய்து இருந்தேன்.
அத்தோடு நான் முன்னை பதிவில் குறிப்பிட்ட கழகப்புலவர் பெ.பொ. சிவசேகரம் ஐயா அவர்களின் சகோதரியே திருமதி கந்தையா என்ற இராசநாயகி ஆசிரியை ஆவார்கள் என்பதையும் அந்த வகையில் மரியாதைக்குரிய ஐயா பெ.பொ.சிவசேகரனாரும் மதிப்பிற்குரிய காந்தி ஐயாவும் மைத்துனர்கள் என்பதை அறியாதவர்கள் அறிந்து கொள்ள என் இந்தப் பதிவில் ஆவணமாக்குகின்றேன்
அத்தோடு காந்தி ஐயா அவர்கள் சிறந்த சமூகசேவகர் மட்டுமல்லாது ஒரு சமூகசீர்திருத்தவாதியாக திருகோணமலை நகரில் அன்று இருந்த பிச்சைக்காரர்கள் அனைவருக்கும் பிரதி வியாழன் வெள்ளி கிழமைகளில் வாரம் தோறும் பல நல்லுள்ளங்களின் உதவியுடன் குறிப்பிட்ட ஒரு தொகை பணமும் உணவும் கிடைத்திட ஒழுங்கு செய்த ஒரு பெருந்தகை என்பதையும் இங்கே மீண்டும் நினைவு கூறுகின்றேன்
இவற்றை விட ஐயா தான் வாழ்ந்த காலத்தில் திருகோணமலை நகரில் நடந்த அனைத்து மரணவீடுகளின் நிகழ்வுகளில் பேதமின்றி கலந்துகொண்டு காலம் சென்ற ஐயா காசிநாதரோடு திருவாசகம் பாடி சுடுகாடுவரை சென்று (நான் அங்கு வாழ்த்த காலம் வரை) வழியனுப்பி வைக்கும் கர்ம யோகியாக வாழ்ந்தார் என்பதை அறியாதபலர் அறிந்து கொள்ள பதிவாக்குகின்றேன்.
அத்தோடு இந்த சிவனடியான் சிறுவனாய் இருந்த காலத்தில் “வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான்" என்று வாசித்ததே உயர் திரு காந்தி ஐயா அவர்களின் புத்தக கடைவிரிப்பில்தான் என்பதை நினைவில் நிறுத்தி
அந்த கோவில் உற்சவக்காலங்களில் அக்கோவில் வீதிகளில் சிறு கடைவைத்து மலிவு விலையில் வியாபாரம் செய்யும் கடைவிரிப்போடு மட்டுமல்லாமல் ஐயா அனைத்து புத்தகங்களுடன் நடமாடும் புத்தகக்கடையாகவும் தன் வீட்டில் கூட சென்று வாங்கிப் படிக்கும் அளவிற்கு பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஐயா வைத்திருந்தார் என்பதால்
அந்த புத்தகங்களை வாசித்து எங்கள் மண்ணில் பலன் பெற்ற பலரில் நானும் ஒருவனாக நன்றி கூறுகின்றேன்
ஐயாவின் சமூகசேவையும் மனிதாபிமான மிக்க செயல்களும் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றிய தொண்டுகளும் வெறும் முகநூல் பதிவில் அடக்கிவிட முடியாததே ஆயினும் எமது மண்ணின் இளம் தலை முறையும் எதிர்கால சந்ததியும் அறிந்து கொள்ள இது எடு கோலாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு இப்பதிவை காந்தி ஐயாவிற்கு சமர்ப்பணம் ஆக்குகின்றேன்
சுவாமி சங்கரானந்தா🙏

கருத்துகள்