காந்தி மாஸ்டர் என அழைக்கப்படும் திரு. பொ. கந்தையா -ஆனந்தம்-

மாதகலைச் சேர்ந்த திரு. பொ. கந்தையா (காந்தி மாஸ்ரர்)….அ.. ஆ… என நெல்மணிகள் இடையே எனது விரல்களைப்பிடித்து எழுதி எனக்கு ஏடுதொடக்கிவைத்தவர் காந்தி ஐயா, இவர் எனது அம்மம்மாவின் சகோதரர். சிறுவயதில் பெரியார் ஒருவரின் சொற்பொழிவில் ஆழ்ந்த திடசங்கற்பம்கொண்டு சைவ உணவை உண்பதையும் வெள்ளிக்கிழமைகளில் பால் மட்டுமே அருந்தும் வழக்கத்தை கொண்டிருந்தார். காந்திய வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு, தேனீர் பானங்கள், மிளகாய் சம்பந்தப்பட்ட காரம் உள்ள உணவு வகைகளை அறவே தவிர்த்து வந்தார்.

இவரது திருமணம் ஒரு வித்தியாசமான முறையில் அந்தணர்களின்றி தமிழ் முறைப்படி நடந்ததாக எனது தாயார் மூலம் அறிந்தேன்.

ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்று அதன் பின்னர் மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை தாரக மந்திரமாக கொண்டு அதனை விசுவாசமாக கடைப்பிடித்தார். உதவி என்று யாராவது அவரிடம் சென்றால் தன்னால் முடியாவிடினும் தனக்கு தெரிந்தவர்கள் மூலமாகவாவது அணுகி அந்த உதவியை செய்வார், பணவிடயங்களில்கூட இவர் பொறுப்பு நின்ற விடயங்கள் ஏராளம் அதனால் பலமுறை ஏமாற்றப்பட்டதும் உண்டு.

குட்டையான உடல்வாகும் இடுப்பில் ஒரு நாலுமுழ வேட்டியும், மேல் உடம்பை மறைக்க இன்னும் ஒர் நாலுமுழ துண்டும், இடதுகையில் ஒரு பை, வலது கையில் ஒரு குடை, வெள்ளைத்தாடி, சிரித்த முகம், புன்முறுவலுடன் கூடிய ‘ஆனந்தம் ஆனந்தம்’ என்ற வார்த்தைகள், இது தான் காந்தி ஐய்யாவின் அடையாளம். நுணசையம்பதி கொண்ட மாதகலை பிறப்பிடமாக கொண்டாலும் அவர் வரித்துக்கொண்டதோ கோணேச்சரம் கொண்ட திருகோணமலை, ஆனாலும் முருகன் மேல் உள்ள பற்றுதலால் போலும் மகனை முருகன் என பெயரிட்டு அழைத்தார் அதோடு முத்துக்குமாரசாமி கோவில் ஆலயத்தின் தேர்முட்டியின் பின் பகுதியில் இவருக்கு கோவில் பரிபாலனசபை வீடு அமைத்து இவரது சேவையை பாராட்டி வழங்கியிருந்தனர்.

அன்னார் தனது 99 அகவையில் தனது இப்பூவுலக சேவையில் இருந்து இளைப்பாறியதை அறிந்து ஆழ்ந்த கவலை அடைந்தேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்ற அதேசமயம் அன்னாரின் பிரிவால் வாடும் என்போன்ற அனைவருக்கும் முக்கியமாக மகன் முருகன், வளர்ப்புமகன் யோகன், அவர் துணைவியாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

பாலேந்திரா சுரேஷ்.

காந்திமாஸ்டர் வைரவிழா மலர் 1992


    நூலகம் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.

ஆனந்தம் (பொ.கந்தையா, காந்தி) ஐயாவுக்கு அகவை 99

19 டிசம்பர் 2016

Yogan Kavi facebook இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.


ஒரு தலைமுறையின் இருப்பு
23 நவம்பர் 2016

அண்மையில் தான் திருகோணமலை காந்தி ஐயாவைப் பற்றிக் கேள்விப்பட்டேன். கௌரிபாலனும் சாத்தியதேவனும் மாறி மாறி அவரது ஒவ்வொரு இயல்பையும் வாழ்வின் இருப்பையும் பற்றிச் சொன்னார்கள்.அவரது கதையைக் கேட்ட பின் நாம் எல்லாம் என்ன கிழித்து விட்டோம் என்பது போலிருந்தது.

இது தான் கதை ,

திருகோணமலையில் வாழ்ந்த காந்தி ஐயா ஒரு காந்திய வாதி , அதற்கேயுரிய எளிமையுடன் வாழ்ந்த மனுசன். அவர் தனது இறுதிக் காலம் வரை செய்த ஒரு பணி , பள்ளிக்கூடங்களுக்கு முன்னோ அல்லது கோயில் திருவிழாக்களிலோ ஒரு வேட்டியை விரித்து விட்டு ஆன்மீகப் புத்தகங்களை போட்டு வைத்திருப்பார். பிள்ளைகளோ பெரியவர்களோ புத்தகங்களை பார்த்து தொட்டு எடுத்து தட்டி அதனை எடுத்தும் செல்வார்கள் ,இல்லை வைத்து விட்டும் போவார்கள் . அவர் ஒரு அமைதியான இருப்பாக அந்த இடத்தில் இருந்துகொண்டிருப்பார். இப்படித் தான் அவரிடம் யார் புத்தகங்களை விற்றுக் கொடுக்கக் குடுத்தாலும் அதை அவர் அங்கே வைப்பார். கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீகப் புத்தகங்களுக்கடியில் ராதுகா பதிப்பகம் போட்ட சிவப்பு மட்டைப் புத்தகங்களும் வந்து சேர்ந்தது. அதனை படிக்கும் ஒரு தலைமுறையும் உருவானது. காசில்லையென்றால் அதை எடுத்து அருகிலிருந்து படித்து விட்டும் கொடுக்கலாம். அவருக்கு அதை விற்பதிலேல்லாம் அக்கறை இருந்ததாக தெரியவில்லை. அவர் ஒரு தனி மனித இயக்கம் . அவருடைய மனைவி அவரின் நம்பிக்கையாயும் முதுகெலும்பாயும் இருந்தார் என்றார் கௌரிபாலன்.

நடந்து கொண்டிருக்கும் போதே மனுசன் நித்திரையாய் போய் விடும் யாரவது தட்டி “காந்தி ஐயா ” என்றால் திரும்பவும் நடந்து போய்க் கொண்டிருப்பார் என்று சாத்தியதேவன் சொன்னார்.

இப்படி உறக்கமற்று அலைந்த அந்த காந்தியவாதியின் வாழ்க்கையில் ஒரு ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு இருந்தது. அவர் ஒரு பழைய வேட்டியை விரித்துவிட்டு செய்த அந்த புத்தகக் காட்சி உருவாக்கிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தான் இந்தக் கதையைச் சொன்ன இருவரும். அவரின் ஞாபகார்த்தமாக மலர் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.

இந்தக் கதையில் எந்த நீதிக் கருத்தையும் சொல்லவில்லை. ஆனால் அந்த வாழ்வுக்கு இருந்த அர்த்தத்தை அந்தத் தலைமுறைக்கே உரிய வாழ்வியல் ஒழுக்கத்தை இன்று நான் செய்யும் எதிலாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. இப்படியான மனிதர்களும் இருந்தார்கள் என்பதை கேட்கும் போது தோன்றுகின்ற மன எழுச்சியும் அவர்களின் பிரமாண்டமான வாழ்வின் முன் சிறுவனாக நின்று கொண்டிருக்கின்ற இப்போதைய மன நிலையும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நமக்கு இன்னும் இன்னும் அற்புதங்கள் இருக்கின்றன என்றே தோன்றுகிறது.

சரி , இனி விடயத்திற்கு வருவோம் . படிப்பகம் (யாழ்ப்பாணத்தில் உள்ளது , ஆரிய குளம் சந்தியிலிருந்து ரயில் நிலைய பக்கமாக ஒரு ஐநூறு மீட்டர் தொலைவில் ) புத்தகக் கடையில் தற்போது ஆயிரம் ரூபாய் வைப்புப் பணமாகச் செலுத்தி ஒரு ஆள் ஒரு புத்தத்தை இரவலாக எடுத்து வாசிக்கும் முறை உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் , அதே கடையில் ரஷிய சிறுகதைகள் தொகுப்புக்கள் உள்ளன , அவற்றில் ஒன்று, இரண்டு , மூன்று என இலக்கமிடப் பட்ட சிறுகதைத் தொகுதிகளும், தஸ்தவேஸ்கியின் குறுநாவல்கள் அடங்கிய பழைய பதிப்பும் உள்ளது , ரஷிய புரட்சி 1917 பற்றிய ஒரு கொமிக்ஸ். இன்னும் , சிறுவர்களுக்கான “எரிப்பறவை ” மூன்று தடியர்கள் ” போன்ற கடின அட்டை போட்ட சித்திரக் கதைகளும் உள்ளன. இவற்றை நான் மிகவும் விரும்பிப் படித்தேன். மிகவும் அழகிய வடிவமைப்பில் தொட்டு எடுத்து பார்த்து வாசிக்காத தூண்டும் புத்தகங்கள் அவை. விரும்பும் நண்பர்கள் சென்று வாங்கலாம். உங்கள் குழந்தைகளுக்கோ அல்லது நூலகங்களுக்கோ வாங்கிப் போடுங்கள். இன்னும் நிறைய புத்தகங்களை நீங்கள் பார்க்கலாம், வாங்கலாம்.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் யாழ்ப்பாணத்தில் உள்ள புத்தகக் கடைகளில் இரண்டு தான் மிக முக்கியமானது என்று கருதுகிறேன், (நகரைப் பொறுத்த வரையில் ) ஒன்று படிப்பகம் , மற்றது புத்தகக் கூடம் (Book Lab ). இதில் புக் லாப் தான் நீண்ட கால அறிமுகமுள்ள முக்கியமான புத்தக நிலையமாக இருந்துகொண்டிருக்கிறது. புத்தகங்களை பற்றி அறிவுள்ள புத்தக கடை வைத்திருப்பவர் ரவி. ஆனால் எப்பொழுதும் சலிப்புடன் தான் அவர் உரையாடுகிறார். இன்னும் எவ்வளவோ புத்தகங்களை கொண்டு வர அவருக்கு விருப்பம் இருந்தாலும் , யார் இவற்றை வாங்குகிறார்கள் என்று விட்டுவிடுவதாகச் சொன்னார். இப்படியானவர்கள் தொடர்ந்து சலித்துப் போனால் நமது அறிவுச் சூழல் என்ன ஆவது ? அவர்களிடம் விலை அதிகம் என்று சொல்லும் நாங்கள் பத்துப் பேர் தான் புத்தகம் வாங்குகிறோம். ரவி அண்ணை, அடிக்கடி சொல்லும் விஷயம் ஒன்று “இவர்கள் கம்பஸ் பெடியள் வந்து புத்தகம் தேவையில்லை அதில ஒரு ரெண்டு பக்கம் தான் தேவை , போட்டோக் கொப்பி அடிச்சிட்டு தரட்டுமா ” என்று கேட்பார்கள் என்றார். இந்த நிலைமையில் தான் புத்தகங்களும் புத்தகக் கடைகளும் உள்ளது.

இப்பொழுது காந்தி ஐயாவை நினைத்துப் பார்க்கிறேன்.அந்தத் தலைமுறையிலிருந்து எழுந்து நின்ற அந்த மனிதரின் தைரியம் எங்களுக்கும் வாய்க்க வேண்டும்.

கிரிஷாந்த். facebook இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.

Friday, May 29, 2009
காந்தி ஐயா / காந்தி மாஸ்டர்

திருகோணமலைக்கு வந்து ‘காந்தி ஐயா’ என்று கேட்டால் சிறுபிள்ளைகள் கூட ஆர்வத்துடன் அவர்பற்றிச் சொல்வார்கள். இத்தனைக்கும் அவர் அரசியல்,சினிமா சார்ந்தவரோ அல்லது பிரபல தொழிலதிபரோ இல்லை. உயரம் குறைந்த,நரைத்த தாடியுடன் கூடிய கருணை பொ்ழியும் முகத்துக்குச் சொந்தக்காரர். அவர் ஒரு ஏழை. ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர். அவரது ஒரே சொத்து புத்தகங்கள்தான்.சமய,கலாச்சார,இலக்கிய நூல்களால் நிறைந்து கிடக்கிறது அவர் வீடு. அவற்றினை சேவை நோக்கோடு விற்பனை செய்வதே அவரது வேலை. திருகோணமலையில், பலரது வாசிப்பு பழக்கத்தின் உந்து சக்தியாக இருப்பவர்.

திருகோணமலையில் நடைபெறும் எந்த்வொரு விழாவிலும் அவரது புத்தகக் கடையினை நீங்கள் காணலாம். படிக்கும் காலத்தில் நிறைய சிறு புத்தகங்களை அவரிடம் இருந்துதான் நான் வாங்கி வாசித்தேன். 92 வது வயதினைத்தொடும் காந்தி ஐயாவின் சொந்தப்பெயர் பொன்னம்பலம் கந்தையா. 1918 இல் யாழ்.மாதகலில் பிறந்த இவரது பெரும் பாலான வாழ்க்கைக்காலம் திருகோணமலை மக்களது முன்னேற்றத்துக்குப் பயன்பட்டது. இவர் தம்பலகாமம் சாரதா வித்தியாலயத்தில் கடமையாற்றிய காலத்தில் தனது ஒருவருட சம்பளத்தை அதன் அபிவிருத்திக்காக வழங்கியிருந்தார். ஆர்வத்துடன் வரும் இளைஞர்களுக்கு இலவசமாக பத்தகங்களை வழங்குதல் , நாடி வருபவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்தல், கதிர்காம யாத்திரை முதலான சமய நிகழ்வுகளைக் கொண்டு நடத்துதல் என்று நீண்டு செல்கிறது இவர் பணி. 1945 முதல் காந்திய வழி நிற்கும் இவர் இடுப்பில் ஒரு துண்டு வேட்டியும், மார்பில் ஒரு சால்வையும் அணியும் வழக்கத்தைக் கொண்டவர். இதனால் எல்லோரும் காந்தி ஐயா என்றே அன்பொடு அழைப்பர்.

அவரிடம் யார் சென்றாலும் ‘ஆனந்தம், ஆனந்தம்’ என்று சொல்லி வரவேற்பார். இவ் வார்த்தைகளுக்கு ஏற்ப ஆனந்தமாகவே , உள்ளத்தில் காந்தீய உணர்வோடு இன்றும் இளமையாக காட்சி தருகிறார்.

த.ஜீவராஜ் geevanathy இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.

திருகோணமலை காந்தி ஐயா எனும் சமூகத் தொண்டன்

காந்தி ஐயா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகின்ற பொ.கந்தையா அவர்களின் 97வது பிறந்தநாள் நிகழ்வு 19.12.2015 சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் திருகோணமலை முத்துக்குமாரசுவாமி கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பல சமயப்பணிகளிலும் சமூகப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி தற்போதும் தளராத பேனா முனையுடன் பல சேவைகளை செய்து வருகின்ற திருகோணமலையின் மூத்த மகன் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாதகல் என்னும் கிராமத்தின் மேற்குப்பக்கமாக அமைந்துள்ள நுணைசை முருகமூர்த்தி கோவிலடியைச் சேந்த பொன்னம்பலத்திற்கும் – நன்னிப்பிள்ளைக்கும் 2வது மகனாக 1918ம் ஆண்டு மார்கழி மாதம் 19ம் திகதி பிறந்தார்.

இவர் தனது ஆரம்ப கல்வியை தற்போது முருகமூர்த்தி வித்தியாலயம் என்று அழைக்கப்படுகின்ற மாதகல் அமெரிக்க மிஷன் பாடசாலையில் 5ம் வருப்பு வரை கற்று பின்னர் 6ம் 7ம் வகுப்பினை பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையில் 8ம் வகுப்பினையும், மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் பண்டிதர் க.பொ.இரத்தினம் அவர்கள் அதிபராக இருந்த காலப்பகுதியில் 9ம் வகுப்பினையும் கற்று ஆசிரியர் தரதரப்பதிரத்திலும் தேர்ச்சி பெற்று அப்பாடசாலையிலேயே உதவி ஆசிரியராக சேர்ந்தார்.

எனினும் வவுனியாவில் உள்ள கருங்காலிக்குளம் அரசினர் பாடசாலையில் முதன் முறையாக 1938ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி நியமணம் பெற்றார் அப்போது இப்பாடசாலையில் 27 மாணவர்கள் கற்றனர். இதன்போது சம்பளமாக 43.00 ரூபா பெற்றார். தொடர்ந்து 1939ம் ஆண்டு மட்டக்களப்பு ஏறாவூர் அரச பாடசாலையிலும் 1943 ம் ஆண்டு திருகோணமலை பெரிய கிண்ணியா அரச பாடசாலையிலும் 1946ம் ஆண்டு திருகோணமலை தாமரைவில்லில் புதிய அரசினர் பாடசாலை ஒன்றை தொடங்கி தனது பணியை தொடர்ந்த காந்தி ஐயா தொடர்ந்து திரியாயிலும் அரச பாடசாலை ஒன்றை தொடங்கி சேவையாற்றியிருந்தார்.

பின்னர் 1947ம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் கக்கல அரசினர் பாடசாலையில் சேவையாற்றி அரச சேவையில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்தார்.
இருப்பினும் ஐயாவினுடைய சேவை மாணவர் சமுதாயத்திற்கு தேவை என்று கருதிய கல்வி அதிகாரி திரு.சந்திரசேகரம் அவர்கள் கொக்குவில் இராமகிருஷ்ண மிஷன் சைவ வித்தியாலயத்தில் சேவை செய்ய ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனால் 1947ம் ஆண்டில் இருந்து 1951ம் ஆண்டு வரை அங்கு சேவையாற்றி பின்னர் 01.01.1952ல் திருகோணமலை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து தொடர்ந்து 1954ம் ஆண்டு தம்பலகாமம் இராம கிருஷ்ண மிஷன் பெண் பாடசாலையிலும் பணியாற்றி மீண்டும் 1955ம் ஆண்டு திருகோணமலை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து 1961ம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார்.

இறுதியாக திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியர் பாடசாலைக்கு 1961ல் இடமாற்றம் பெற்று 43வது வயதில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதற்கிடையில் 1953ம் ஆண்டு இராசநாயகி என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்து 1955ம் ஆண்டு கதிர்காமநாதன் என்ற மகனைப் பெற்றெடுத்து பல பட்டங்கள் பாராட்டுகள் கிடைத்தபோதும் எவற்றையும் தன் பெயரின் முன் சேர்க்காமல் எளிமையாக காந்தியின் வழியில் திருகோணமலை முத்துக்குமார சுவாமி கோவிலின் முன்பாக அமைந்துள்ள சிறிய வீட்டில் வாழ்ந்து வருகின்றார்.

Thanks Sanjeevan Thurainayagam facebook & trinconews இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.

 


 திருமலை சிரேஷ்ட பிரஜை பொ.கந்தையா ஆசிரியரின் பிறந்ததின விழா…
20-Dec-2015

திருகோணமலை சிரேஷ்ட பிரஜை பொ.கந்தையா ஆசிரியரின் 97ஆவது பிறந்த தினம் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அனைவராலும் ஆனந்தம் ஐயா, காந்தி ஐயா என அழைக்கப்படும் அன்னாரை வாழ்த்த அசல் சமூகநோக்குநர் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. முத்துக்குமார சுவாமி தேவஸ்தானம் கல்யாண மண்டபத்தில் இவ்விழா நடைபெற்றது. பெருமளவிலான அன்பர்கள் கலந்து கொண்டு காந்தி ஐயாவை வாழ்த்தியதோடு, கலைநிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.

  onlineuthayan இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.

இவர்தான் உண்மையான ஈழத்து காந்தி!  October 27th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

ஈழத்து காந்தி என்கிற பெயருக்கும், கௌரவத்துக்கும் உண்மையில் உரியவர் திருகோணமலையில் வசித்து வருகின்ற காந்தி ஐயா.

யாழ்ப்பாணத்தில் மாதகல் பிரதேசத்தில் 1918 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி பிறந்தவர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் கந்தையா. ஐந்தாவது வயதில் இருந்து சைவ உணவுகளை மாத்திரம் உண்டு வருகின்றார். ஆசிரியப் பணியே அறப் பணியாக கொண்டு 25 வருடங்கள் சேவை ஆற்றினார். திருகோணமலையை வதிவிடமாக வரித்துக் கொண்டார். அதிபராக இருந்து ஓய்வு பெற்றவர்.

1945 ஆம் ஆண்டு முதல் காந்திய வழியில் முழுமையாக நின்று வருகின்றார். 1949 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஆரம்ப உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இடுப்பில் ஒரு துண்டு வேட்டியும், மார்பில் ஒரு சால்வையுமாக நடமாடுவார். நரைத்த தாடியுடன் கூடியதாக கருணை பொழியும் முகம் உடையவர். யார் இவரிடம் சென்றாலும் ஆனந்தம்… ஆனந்தம் என்று முக மலர்ச்சியுடன் சொல்லி காந்திய உணர்வோடு வரவேற்பார். இக்காரணங்களாலேயே இவர் காந்தி ஐயா அல்லது காந்தி மாஸ்டர் என்று மக்களால் அன்பாக அழைக்கப்படுகின்றார். திருகோணமலைக்கு சென்று காந்தி ஐயா என்று சிறுபிள்ளைகளிடம் கேட்டால்கூட இவரைப் பற்றி மிகவும் ஆர்வமாக சொல்வார்கள்.

இவர் ஒரு சிறந்த வாசகன். வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான் என்பது இவரின் நம்பிக்கை. இவரது வீடு முழுவதும் புத்தகக் கும்பல்கள்தான். இவைதான் இவர் சேர்த்த சொத்துக்கள். ஏராளமானவர்களின் வாசிப்புப் பழக்கத்துக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கின்றார். திருகோணமலையில் இலக்கிய விழாக்கள் என்றால் இவருக்கு ஒரே கொண்டாட்டம். தவற விட மாட்டார். சிறந்த நகைச் சுவை உணர்வும் உடையவர். சமயப் பணி, சமூகப் பணி ஆகியவற்றை இவரின் கண்கள் என்று கூறலாம்.

tamilcnn இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.


எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காந்தி ஐயாவிற்கு இன்று 94 ஆவது பிறந்த தினம்!
December 19, 2011

1949 ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும் சங்கத்தின் ஸ்தாபக பொருளாளரும், தற்போது எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காந்தி மாஸ்டர் என்று அன்புடன் அழைக்கப்படும் காந்திப் பெரியார் பொ.கந்தையாவின் 94 ஆவது பிறந்த தினம் இன்று திங்கட்கிழமை (19.12.2011) யாகும்.

அவர் திருகோணமலை முத்துக்குமாரசுவாமி ஆலயத்தின் முன்னால் உள்ள தனது இல்லத்தில் அமைதியாக தனது 94 ஆவது பிறந்த தினத்தை தம்மை வாழ்த்த வந்த அன்பர்களுடன் கழித்தார்.
19.12.1918 அன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாதகல் பிரதேசத்தில் பிறந்த இவர் தனது ஐந்தாவது வயதிலிருந்தே சுத்த சைவ போசனகாரராக மாறி இன்று வரை தொடர்கின்றார். சுத்த சைவ போசககாரர்கள் நீண்ட ஆயுளையும் தேகாரோக்கியத்தையும் கொண்டவர்கள் என்பதற்கு காந்தி மாஸ்ரரின் வாழ்வு ஒரு உதாரணமாகும். அவர் ஆசிரியாராக வாழ்க்கை ஆரம்பித்தார். ஆசிரியர் சேவையில் 25 வருட காலத்தை பூர்த்தி செய்த பின்னர் அவர் ஓய்வு பெற்றார். அவர் நகைச்சுவையாக கூறுகின்றார்.’ ஐயா, 25 வருடம் ஆசிரியராக சேவை செய்து ஓய்வு பெற்றேன். ஆனால் 52 ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற்று வருகின்றேன்’ என்றார். ( இன்று 94 வயது பிறந்த தினமன்று காந்தி பெரியாரை சந்தித்த போது எமது கமராவுக்குள் நாம் அவரை அடக்கி கொண்டோம்)

காந்தி பெரியாருக்கு தினக்கதிர் ஆசிரியர் குழுமமும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.


thinakkathir இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.
Share:

No comments:

Post a Comment