யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தின் வரலாறு…!

01.03.2013-மீண்டும் புதுப்பொழிவுடன் சொந்த இடத்தில் எமது மாதகல் நுணசை வித்தியாலயம்…


மாதகல், யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், சண்டிலிப்பாய்ப் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூர் மாதகல் கிழக்கு, மாதகல் தெற்கு, மாதகல் மேற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளுக்குள் அடங்குகிறது. எமது பாடசாலையானது 1992 இல் ஏற்பட்ட இடம்பெயர்வின் பின்பு மீண்டும் தனது சொந்த இடத்தில் கடந்த 02/01/2013 இல் இருந்து நடைபெற்று வருகிறது.

முதலில் இப்பாடசாலையின் வளர்ச்சிப்படிகளினை பார்ப்போமேயானால் இப்பாடசாலையானது பழைய இரு பாடசாலைகளின் இணைப்பால் உருவாகியது அவற்றுள் ஒன்று நுணசை அமெரிக்கன் மிஷன் பாடசாலை, மற்றையது நுணசை முருகமூர்த்தி வித்தியாலயம்.

மாதகல் கிராமத்திலேயே முதற்பள்ளிக்கூடமாக 1824 ஆம் ஆண்டளவில் சரவணமுத்துச் சட்டம்பியாராலும் அவரின் வழி வந்தோராலும் திண்ணைப்பள்ளிக்கூடமாக நடத்தப்பட்டு பின்னர் அமெரிக்கன் மிஷன் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பெற்றதே நுணசை அ.மி.த.க. பாடசாலையாகும். இவ்வூர் சைவ மக்களின் தூண்டுதலின் பேரில் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தால் 1957 ஆம் ஆண்டில் தாபித்து நடத்தி வரப்பெற்றது நுணசை முருகமூர்த்தி வித்தியாலயம். இவ்விரு பாடசாலைகளும் ஆரம்ப பாடசாலைகளாகவே இயங்கிவந்தன. ஆயினும் இடையில் சில ஆண்டுகள் இடைநிலை வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் போதிய மாணவர் இன்மையால் அவ்வகுப்புக்கள் தொடர முடியாது கைவிடப்பட்டன.

ஒன்றிணைப்பிலிருந்து சு. விக்கினராஜா, க.வீரவாகு, க.சுப்பையா, தா.சின்னத்துரை, நா. பொன்னையா ஆகியோர் முறையே அதிபர்களாக நிர்வாகத்தை மேற்கொண்டனர். இவர்களுக்குள் இப்பாடசாலையை தரம் 11 வரை உயர்த்த அரும்பாடுபட்டு உழைத்தவர் நா. பொன்னையா சேர் அவர்கள். அவர்களை யாரும் மறந்துவிட முடியாது கால் இயலாத நிலையிலும் கூட மாணவர்களை ஊக்கத்துடன் பாடசாலைக்கு வரவழைத்து கற்பித்த பெருமை அவரையே சாரும். எந்த வகுப்பில் ஆசிரியர் இல்லை என்றாலும் அந்த வகுப்பிற்கு தன் இயலாமையை பொருட்படுத்தாது சென்று கல்வி புகட்டியவர்.

 

                                                            பாடசாலைக்காக பெரிதும் பாடுபட்ட அதிபர் பொன்னையா சேர்

பாடசாலை ஒன்றிணைப்பினால் ஆரம்பக் கல்வியில் சிறிது முன்னேற்றங் காணப்பட்டபோதிலும் 1975 இல் இருந்தே குறிப்பிடக்கூடிய வளர்ச்சியை அவதானிக்கக் கூடியதாயுள்ளது. அக்காலகட்டத்தில் அதிபராகவிருந்த அமரர் திரு.தா.சின்னத்துரை அவர்களும் உதவியாசிரியர்களும் பெற்றார் ஆசிரியர் சங்கமும் ஒருமுகமாய் நின்று எடுத்த அயரா முயற்சியினால் பாடசாலை கனிட்ட வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டமை பாடசாலை வளர்ச்சியின் முதற்படியாகும். 1975 இல் க.பொ.த (சா.த) வரை வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 1983 இல் ஆறு மாணவர்கள் பல்வேறு பாடங்களில் அதி திறமைச் சித்தி பெற்றதோடு ஐந்து மாணவர்கள் க.பொ.த (உ.த) வகுப்பில் கற்பதற்குத் தகுதி பெற்றுச் சாதனையை நிலைநாட்டியமை குறிப்பிடத்தக்கது.

எமது வித்தியாலயம் வசதிகள் குறைந்த சிறிய பாடசாலையாக இருந்த போதிலும் க.பொ.த(சா.த) பெறுபேறுகளிலும் குறிப்பிடக்கூடிய முன்னேற்றம் கண்டு வந்தது. 1980ல் 42 வீதமாய் இருந்த சித்தியடைந்தோர் தொகை 1983 இல் 55 வீதமாய் உயர்ந்துள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையிருந்த போதும் ஆசிரியர்கள் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சியே இவ்வுயர்வுக்குக் காரணமெனலாம். அவ்வப்போது நடைபெறும் சமய, மொழி, கலாசார நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் எமது மாணவர்கள் பங்குகொண்டு சிறந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர். 1979 இல் நடைபெற்ற அகில இலங்கை இசை நாடக நடனப் போட்டியில் எமது வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வன். கோ.அருளானந்தன் குணச்சித்திர பாத்திர நடிப்பில் கனிட்ட பிரிவில் அகில இலங்கையிலும் முதலாம் இடத்தைப் பெற்றமை எமது வித்தியாலயத்துக்குப் பெருமை தரும் நிகழ்ச்சியாகும். அதன் பின்னர் சேனாதிராஜா அவர்கள் அதிபர் பதவி வகித்தார்.

அதனை தொடர்ந்து திரு பேரம்பலம் அவர்கள் மிகவும் சிறப்பாக பாடசாலையை நிர்வகித்து வரும் வேளையில் இவ்வாறு பெரும் வளர்ச்சி கண்ட பாடசாலை இடம்பெயர்வினை சந்திக்க நேரிட்டது அதன் போது மானிப்பாயில் பெரும் சிரமத்திற்கு மத்தியில் கொட்டில்கள் அமைத்து அங்கே கல்வி நடவடிக்கைகளை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து சென்றது. அதன்போது அதிபருடன் தோளோடுதோள் நின்று உழைத்த ஆசிரியர்களை மறந்துவிட முடியாது. அங்கு கொட்டில் அமைத்து பாடசாலை நடாத்தினாலும் பாடசாலையில் நடைபெறும் விழாக்களும் கல்வி நடவடிக்கைகளும் அவ்வாறே நடந்த வண்ணம் இருந்தது. அதனை தொடர்ந்து எழுதுமட்டுவாள் வரை இடம்பெயர்ந்து பின்பு மாதகல் மண்ணில் அப்பாடசாலை கொண்டு வந்து சேர்ப்பிக்கப்பட்டது.

அதன் பின்பும் எமது பாடசாலை இன்னோர் பாடசாலையுடன் இணைந்து தமது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அங்கும் கூட எமது மாணவர்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்த வண்ணம் தான் இருந்தார்கள். நீண்ட காலத்திற்கு பின்பு தரம் 05 நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவன் சித்தியடைந்தமை பாடசாலைக்கும் எம்மக்களுக்கும் பெருமை தரும் விடயம் என்றே கூற வேண்டும்.

கடந்த வருடம் பிற்பகுதியில் மீண்டும் மாதகல் பிரதேச மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள மாணவர்களின் கல்வி முன்னேற்ற நடவடிக்கைகளில் அக்கறை கொண்டு மீண்டும் சொந்த இடத்தில் பாடசாலை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. அரச பிரமுகர்களின் ஆசியுடன் பாடசாலை அதிபரிடம் கையளிக்கட்டதுடன் பாடசாலைக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்கி பாடசாலை சிறப்பாக நடக்க உதவுவதாகவும் வாக்குறுதி வழங்கப்பட்து.

மீண்டும் எமது பாடசாலை 02.01.2013 அன்று தரம் 01 முதல் தரம் 11 வரை ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. எம்மண்ணுக்கு திரும்பிய மகிழ்ச்சியுடன் மக்கள் தாம் கற்ற பாடசாலையிலே தம் பிள்ளைகளும் தரம் 01 முதல் தரம் 11 வரை கல்வி கற்கின்றமையை பெருமையாக ஏற்று மாணவர்களை பாடசாலையில் இணைப்பதற்கு பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றமை மகிழ்ச்சி தரும் விடயமாக அமைகிறது. இப்பாடசாலையின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் செயற்படும் நோக்குடன் பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 20.01.2013 அன்று பழைய மாணவ சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பழைய மாணவர்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக் கொடுத்து அவர்களின் கல்விக்கு பெரிதும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பழைய மாணவர்களால் இங்கு கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சனி ஞாயிறு தினங்களில் இலவச கல்வி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகிறது. இவ்வகுப்பிணைச் சிறப்பாக நடாத்த பழைய மாணவர்கள், புலம்பெயர்ந்த இப்பாடசாலை பழைய மாணவர்கள்இ புலம்பெயர்ந்த பழைய மாணவர் சங்கம், மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கிய சுன்னாகம் றோட்டறக்ட் கழகம் இ மானிப்பாய் மேற்கு இளைஞர் கழகம் போன்றோர் பெரிதும் உதவி வருகின்றமை குறிப்படத்தக்கது.


எம் பாடசாலை இடம்பெயர்வுக்கு முன் எவ்வாறு இயங்கியதோ அதே போல் மீண்டும் சிறப்பாக ஒத்த ஒரே குடும்பம்போல ஒற்றுமையோடும் ஒழுக்க சீலத்தோடும் வழிநடத்தப்பட்டு வருகின்றமை மகிழ்ச்சி தரும் விடயம் என்றே கூற வேண்டும். எம் பாடசாலை மீண்டும் சொந்த இடத்தில் தரம் 01 முதல் தரம் 11 வரை புது பொழிவுடன் ஆரம்பிக்க முயற்ச்சி எடுத்த அரச பிரமுகர்களுக்கும்இ கல்வி அதிகாரிகளுக்கும்இ அதிபருக்கும்இ ஆசிரியர்களுக்கும்இ பெற்றோருக்கும், எம்மக்களுக்கும் பழைய மாணவர் சங்க உறுப்பினர் என்ற ரீதியில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

தொடர்ந்தும் இப்பாடசாலை மேலும் சிறந்து விளங்க வேண்டும் இதே போல் அனைவரும் கை கொடுக்க வேண்டும் என்றும் வேண்டி நிற்கிறேன்.


                                                                                                                                 சுபோதினி. சபாரத்தினம்
                                                                                                                                           பழைய மாணவி

Share:

No comments:

Post a Comment