பாக்கியம் மாமி…!

பவித்திரா : பாக்கியம் மாமி…! பாக்கியம் மாமி….! என்ன, இண்டைக்கு கூப்பிடக் கூப்பிட தெரியாத மாதிரி போறா…

பாக்கியம் மாமி: என்ன பிள்ளை பவித்திரா கூப்பிட்டனியளோ….!
பவித்திரா : ஓம்…ஓம் நான்தான் கூப்பிட்டனான்…ரவுணுக்கு போட்டுவாறியள் போல கிடக்குது..இண்டைக்கு மதியத்துக்கு உலை வைக்க அரிசி கொஞ்சம் வேண்டுவம் எண்டுதான் கூப்பிட்டனான். அதுசரி மாதகல்லை திடீர் சுற்றிவளைப்பாம்…ஒராள கைது செய்ததாம்…ஏதும் அறிஞ்சனியளோ….? என்ன நடந்ததாம்…..??
பாக்கியம் மாமி: ஓம் அறிஞ்சனான்தான்….நேற்று விடியப்புறம் 2 மணிக்கு பொலிசார் கரையோரமாய் ரோந்து போனவங்களாம்.அப்பதான் மாதகல் பகுதியில ஆக்களின்ரை நடமாட்டத்தை அவதானிச்சு அந்தப் பகுதியிலை சுற்றி வளைச்சு தேடியிருக்கிறாங்கள்…ஒராள் மூன்று பயணப்பொதிகளோடை முழிச்சுக்கொண்டு நிண்டிருக்கிறார்.சந்தேகப்பட்ட பொலிசார் ஆளைப் பிடிச்சு விசாரிச்சு அவர் வைச்சிருந்த பையை சோதனையிட்டுப் பார்த்தால் அதுக்குள்ள கஞ்சாப் பைக்கற்றுகள் கிடந்ததாம்.அதுகும் என்ன கொஞ்ச நஞ்சமே 55 கிலோவுக்கு மேலயாம்…..!
அப்ப பாரன் பிள்ளை நல் வழிநடத்தல்களோடை இருந்த எங்கடை சமூகத்துக்குள்ளை போருக்குப் பிறகு அழிவுருவான கடத்தல் செயல்நிலைகள் எப்பிடி ஊடுருவி தடைகளின்றி ஊடுகடத்தப்படுகுது………!
பவித்திரா : ஏன் மாமி…இந்தநிலைமை குறையிறமாதிரி தெரியேல்லை….! தொடர்ந்து கொண்டேயிருக்கு…கட்டுப்படுத்த ஏலாதோ…….??
பாக்கியம் மாமி: ஏன் கட்டுப்படுத்த ஏலாது….! 2009 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் நல்ல கட்டமைப்போடை சமூகச் சீர்குலைவு இல்லாமல்தானே இருந்தனாங்கள்……! எப்பவாவது கஞ்சா என்ற சொல்லைத்தானும் கேள்விப்பட்டிருக்கிறமே…அ…பிள்ளை….! இல்லைத்தானே…..இப்ப மட்டும் ஏன் இப்பிடி கட்டுப்பாடில்லாமல் சுலபமாய் ஒரு இடத்திலை இருந்து இன்னோர் இடத்துக்கு கடத்திறாங்கள்…..!
நான் நினைக்கிறன் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலும் அதன்வழி செயற்பட எண்டு ஆளணி வளமும் அரசின்ர பின்புலத்திலை அழிவின் வழிநடத்தலாய் மறைமுக இயங்கு நிலையிலை இருக்கு….ஏனெண்டால் தொடர்சியாய் கடத்தல்களும் சந்தேகத்தின் பெயரில் கைதுகளும் இடம்பெறுகிறது ஆனால் ஒண்டும் கட்டுப்படுத்தப்பட்ட மாதிரி தெரியேல்லையே……!
பவித்திரா : ஓம் மாமி நீங்கள் சொல்லுறது ஒருவிதத்திலை சரிதான்….நாங்கள்தான் விழிப்போடை இருக்க வேணும்…..! எங்கடை இன இருப்பை நாங்கள்தான் பாதுகாத்துக் கொள்ள வேணும்…..! திடமில்லாமல் அழிவின் வழி நடந்து எங்கட சமூக நிலைத்திருப்பை பாதிப்புறச் செய்யாமல் அது போக இளம் தலைமுறையையும் அதன் வழி புகுத்திவிடாமல் பார்த்துக் கொள்ள வேணும்….நற் சிந்தனையோடை,நல் அறிவோடை சிந்திச்சு செயலாற்ற வேணும்….!
பாக்கியம் மாமி: பிறகென்ன பிள்ளை …நீ புரிஞ்சு கொண்டதைப்போல மற்றவையும் புரிஞ்சு நடந்து கொள்ள வேணும்….! அப்பிடி நடந்தால் நற் சமூகமாக வழிப்படலாம்…இல்லையென்றால் அழிவுதான்…..!
பொலிசாரும் இந்தவிடயங்களிலை முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேணும்…..! குற்றவாளிகளை கண்டறிய வேணும்…..! பின்புலங்களை வெகு விரைவாய் கண்டறிஞ்சு கொள்ள வேணும்…..! காலங்களை இழுத்தடிக்கக்கூடாது…..
பவித்திரா : ஓம்…ஓம்…கட்டாயமாய் எல்லாரும் இந்த விடயத்திலை பொறுப்புணர்வோடை செயற்பட வேணும்…..!
சரி மாமி கதையிலை உலைக்கு தண்ணி வைச்சதை மறந்து போனன்..தண்ணி நல்லாய் கொதிச்சு வத்திப்போச்சுதோ தெரியாது..அரிசியை கெதியாய் தாங்கோ நான் போகப்போறன்…
ஓம்..பிள்ளை இந்தா……!

நன்றி மாமி…..!
பாக்கியம் மாமி: சரி…சரி…நானும் சூடாய் ஒரு கோப்பி போட்டு குடிக்க வேணும்…..!
அதுசரி நீங்கள் என்னமாதிரி….! கொஞ்சம் சிந்தியுங்கோ……!
Share:

No comments:

Post a Comment