கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் என அழைக்கப்படும் யாழ். மாதகலைச் சேர்ந்த சிரேஷ்ட கார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்த செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி உயிர் இழந்திருந்தார்…!

அவரது இறுதிக் கிரியைகள் இன்று சனிக்கிழமை (22) யாழ்ப்பாணம் மாதகலிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றதுடன் தொடர்ந்து இறுதி யாத்திரையும் இடம்பெற்றது.
இன்று காலை முதல் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அன்னாரது பூதவுடல் இன்று மாலை 3.30 மணியளவில் இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 4 மணியளவில் மாதகல் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அன்னாரது பூதவுடல் மாதகல் புனித செபஸ்ரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


அஸ்வின் சுதர்சனின் இறுதிக் கிரியைகள் மற்றும் இறுதி ஊர்வலத்தில் அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், யாழ். ஊடக அமையம் சார்பாக சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தயாபரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.


யாழ்ப்பாணம் மாதகலையை பிறப்பிடமாகக் கொண்ட அல்பேர்ட் அஸ்வின் சுதர்சன் பிரபல ஊடகவியலாளரும், பத்திரிகை கார்ட்டூனிஸ்ட் பட ஓவியரும், குறும்பட இயக்குனர் ஒருவருமாவார்.


அரசியல்வாதிகளின் போலிமுகங்களைத் தோலுரித்துக் காட்டியும், சமகால அரசியல் நிலைமைகளை உணர்த்தும் வகையிலும் கார்ட்டூன் சித்திரங்களை வரைந்து பலரதும் கவனத்தையும் ஈர்த்த அஸ்வின் சுதர்சன் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடொன்றில் அடைக்கலம் புகவிரும்புவதாக தனது இறுதி உரையாடலின் போது குறிப்பிட்டிருந்தார்.


வெளிநாடொன்றில் அடைக்கலம் புகுவதற்காக சென்றிருந்த நிலையில் உக்ரேன் நாட்டில் கடந்த மாதம்-22 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் விபத்துக் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டதாகவும், போதிய சிகிச்சைகளின்மையால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.


tamilwin இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.
Share:

No comments:

Post a Comment