மாதகலில் 60 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது: ஒருவர் கைது…!

யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரைப்பகுதியில் வைத்து 60 கிலோ கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜவ்பர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கஞ்சாவானது இந்தியாவில் இருந்து மாதகல் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டிருந்துடன் இதன் போது பருத்தித்துறையை சேர்ந்த இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜவ்பரிற்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலொன்றையடுத்து குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று அதிகாலை மாதகல் கடல்மார்க்கமாக இருவர் கஞ்சாவினை கடத்தி வந்துள்ளனர். இதன்போது கடத்திவந்தவர்களிடம் இருந்து கஞ்சாவினை பெற்றுக்கொள்வதற்கு ஒருவர் நின்றிருந்ததுடன், அவர் அதனை பெற்றுக்கொண்டு சென்ற போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் இச்சம்பவத்தில் கஞ்சாவினை கடத்தி வந்தவர்கள் தப்பிச்சென்றிருந்தனர்.

தப்பிச்சென்றவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேலதிக விசாரணைகளையும் தாம் ஆரம்பித்துள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட கஞ்சாவினையும் கைது செய்யப்பட்ட நபரையும் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜப்வர் தெரிவித்தார்.
athavansrilanka.இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.
Share:

No comments:

Post a Comment