கஞ்சாக் கடத்தல் மையமாக மாதகல் கடற்பரப்பு…!

2016-இந்த செய்தியைப் பார்க்கும் போது வேதனைப்படுவதை விட வேறெதுவும் செய்ய முடியுதில்லை. கடல் வளமும் விவசாய வளமும் மிக்க மாதகல் மண் இன்று நாட்டையே சீரழிக்கும் போதைப் பொருள் கடத்தலுக்கு மையப் பகுதியாக உள்ளதாக சொல்லப்படுவதைக் கேட்கும் போது மிகுந்த வேதனையுற வேண்டியுள்ளது..


உண்மையில் மாதகல் கடற்பரப்பினூடாக போதைப் பொருள் கடத்தல் நடைபெறுகின்றனவா என்பது பற்றி ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். இதன் பின்னால் இருக்கும் அரசியலை விளங்கிக்கொள்ள வேண்டும். போதைப் பொருள் வியாபாரத்தின் பெரும் புள்ளிகள் நாட்டின் வேறெங்கோ நகரங்களில் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களுக்கு 3 ஆவது 4 ஆவது அல்லது அதற்கு கீழ் தரகர்களாக வேலை செய்பவர்களாலேயே மாதகல் கடற்பரப்பில் இப்படியானதொரு சட்டவிரோத செயல் மேற்கொள்ளப்படுகின்றது.
மக்களின் வறுமை நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் போதைப் பொருள் தரகர்களால் யாழ்ப்பாண இளைஞர் சமூகமும் யாழின் கரையோரப்பகுதிகளும் மிக இலகுவாக இலக்கு வைத்துப் பயன்படத்தப்படுகின்றது. ஏழ்மை நிலைதான் இன்று யாழ்குடாநாட்டு இளைஞர்கள் சிலரை இவ்வாறு வழி தவறிப் போகச் செய்கின்றது. நிலையானதொரு அரசியல் கட்டமைப்பும் இல்லாமையும் இதற்குக் காரணமாகும்.
கல்வி கலைகலாசார பண்பாடுகள் ஊடாகவும் அவர்களை நெறிப்படுத்த இன்றைய சமூகத்தின் பெரும் தலைகள் தவறிவிடுகின்றன. இதனை மேலும் ஊக்குவிப்பதான தகவல் பரிமாற்றங்களையும் கலைப்படைப்புக்களையும் தான் ஊடகங்கள் வாயிலாக எம்மை அறியாமலே நாம் வழங்கி வருகின்றோம். கஞ்சா வியாபாரம் செய்பவனை பெரும் பணக்காரணாக குறும்படங்கள் ஊடாகக் காட்டினால் எப்படி இளைஞர்களை நெறிப்படுத்த முடியும்…?
யாழ்ப்பாணம் – கஞ்சா பிடிப்பு கஞ்சா மையம் என்ற செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் உள்ளன. இதனைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கமும் யாழ்ப்பாண மீனவர்களும் நீண்டகாலமாகப் போராடி வருகின்றார்கள். இதனை தடுப்பதற்காக இந்தியாவிலிருந்து கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்பதைக் காரணம் காட்டுவதற்காக இவ்வாறான செய்திகள் ஊடகங்கள் ஊடாக பெரிது படுத்தப்படலாம். குறிப்பாக இந்திய மீனவர்கள் அதிகம் வரும் கடற்பரப்புக்களான மாதகலை அண்டிய கடற்பிரதேசங்களை இதன் மையப்பகுதிகளாகக் காட்டலாம். சிலநேரங்களில் உண்மையாகவே இந்திய மீனவர்களால் இத்தகைய போதைக் கடத்தல் வியாபாரம் மேற்கொளள்ப்படலாம். ஏனென்றால் கடலுக்கு மீன் பிடிக்க வரும் இந்திய மீனவர்கள் மிகவும் வறுமைக்கோட்டுக்குட்பட்டவர்கள். அவர்கள், அவர்களின் முதலாளிகளின் நிர்ப்பந்தத்தாலோ அல்லது தங்களின் வறுமை நிலையாலோ இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடலாம்.
எங்கோ நகரங்களில் ஆடம்பரமாக வாழும் போதைப்பொருள் வியாபாரிகளின் சொகுசு வாழ்க்கைக்காக அப்பாவிகளான யாழ்ப்பாண இளைஞர்களும் இந்திய மீனவர்களும் பலியாடுகளாக்கப்படுகின்றனர். இதனோடு யாழ்ப்பாணமும் அதன் கரையோர ஊர்களும் களங்கமான பட்டப்பெயர்களையும் பெற்றுக்கொள்கின்றன.
மாதகல் மக்கள் உண்மையில் மாதகல் கடல் வழியாக கடத்தல் நடைபெறுகின்றனவா என்பதை அறிந்து அதனை தடுக்க முற்பட வேண்டும். வழி தவறிப்போகும் இளைஞர்களை நேர்மையாகவும் சுயமாகவும் உழைத்து வாழும் நிலைக்கு ஊக்கப்படுத்த வேண்டும். வெளியார்தான் மாதகல் கடற்பரப்பை கடத்தல் வேலைகளுக்கு பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிந்து தடுக்க வேண்டும். நாளைய இளம் சமூகம் வாழும் வளமிக்க மாதகல் மண்ணுக்கு ஏற்பட்டிருக்கு இழி பெயரைத் அழிக்க மாதகல் வாழ் மக்கள் முன்வரவேண்டும்.
– அஸ்வின் சுதர்சன்


Share:

No comments:

Post a Comment