உயர்ந்த மனிதர் கந்தசாமி ஐயா...!

2015- சுபோதினி சபாரத்தினம், மாதகல்…


விழிபுலன் அற்ற மாணவர்களை கல்வியில் முன்னேற்றுவதற்கு விழிபுலன் அற்ற ஒரு முதியவர் கற்பூரம் விற்று அவர்களுக்கு உதவி வந்தார். ஒரு சிறந்த சேவையாளனை பற்றி எழுதுவதில் பெருமையடைகிறேன். அந்த நல்ல உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதரை அனைவரும் அறிய வேண்டும் என்பது என் அவா. ஆனால் அந்த உயர்ந்த மனிதர் இக்கட்டுரை வரையும் வேளை எம்முடன் இல்லை என்பது தான் மனவருத்தம் தரக்கூடிய ஒரு விடயமாகக் காணப்படுகிறது. (01.09.2015 அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04.09.2015 அன்று கைதடி தொழில் பூங்காவில் நடைபெறவிருக்கிறது)

இன்று பலர் சிலரை பார்த்து ஊனமுற்றோர் என்று கூறுகிறார்கள். விழிப்புலனற்றோர், செவிப்புலனற்றோர், பேச்சுத்திறன் அற்றோர் இவர்கள் எல்லோரும் இன்று பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களும் ஏனையோரை போன்றோரே.
தன் உழைப்பில் அன்றி பிறரை சுறண்டி பிறரின் உழைப்பில் எவ்வாறு தாம் சுகமாக வாழலாம் என்று இன்று பலர் எம் நாட்டிலே சிந்தித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். கை இருந்தும் உழைத்து வாழாது பிறரை சுரண்டி வாழ நினைப்பவர்கள் பலர். இவ்வாறு வாழ நினைக்கும் மனிதர்கள் மத்தியிலே விழிப்புலனற்ற இந்த கந்தசாமி ஐயா அவர்கள் தனது பார்வையை இழந்த காலம் தொட்டு இன்று வரை விழிப்புலனற்றவர்களுக்காக தனது சேவையை வழங்கி வருகிறார்.

தன் போன்றோர் வாழ்விலே சிறக்க வேண்டும் என்பதற்காக செல்வச்சந்நதி முருகன் ஆலயத்திலே கற்பூரம் விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு விழிப்புலனற்றோருக்காக கந்தசாமி நிதியம் என்ற ஒன்றை அமைத்து அதனூடாக விழிப்பலனற்ற பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் வழங்கி வருகிறார்கள். இவ்வருட திருவிழாவில் கூட தன் சேவையை விடாது தொடர்ந்தும் கற்பூரம் விற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு சேவையாளரை பலர் அறியாது இருப்பது வருத்தத்திற்குரியது. ஆதலால் தான் இன்று பத்திரிகையினூடாக அவரின் உடல் இம் மண்ணில் சமாதி ஆக முன்பு அவரின் சேவையை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக இக்கட்டுரையை வரைகிறேன்.

உள்ளத்தால் உயர்ந்த இவரை இச்சமூகத்தினருக்கு முன் கொண்டு வந்து காட்ட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. பத்திரிகையிலே இவரை பற்றி முன்னர் எழுதினேன். அதனை எத்தனை பேர் படித்தார்களோ தெரியாது. ஆனால் இன்று அனைவரும் படிக்கக்கூடிய விதத்தில் யாழில் பிரசுரமாக வேண்டும் என்ற ஆசையுடன் வரைகிறேன்.
ஊர்காவற்றுறை சரவணை கிழக்கில் ஆயிரத்து தொளாயிரத்து நாற்பதாம் ஆண்டு பங்குனி மாதம் பத்தாம் திகதி பிறந்தவர் தான் கந்தசாமி. பிறந்த ஆறு மாதத்தில் தந்தையை இழந்து விட்டார். பதின்னான்கு வயதில் பொக்குளிப்பான் நோய் வந்து முற்று முழுதாய் பார்வையை இழந்து விட்டார். தந்தையை இழந்ததால் பொருளாதாரம் பாதிக்கபட்டது. செய்வதறியாது இருந்த கந்தசாமி ஐயா அவர்கள் பதின்னான்கு வயதில் செல்வசந்நிதி ஆலயத்துக்கு சென்று அங்கு கற்பூர வியாபாரத்தை தொடங்கினார்.

அன்றிலிருந்து இன்றுவரை செல்வசந்நிதி மடம் தான் இவர் இருப்பிடமாகியது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதாம் ஆண்டளவில் யாழ் விழிபுலனற்றோர் சங்கத்தில் இணைந்து கொண்ட இவர். கற்பூரம் விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு விழிபுலனற்ற மாணவர்களை கல்வியில் முன்னேற்ற வேண்டும் என்று நினைத்து அவர் சேகரித்து வைத்த சுமார் பத்தாயிரம் ரூபா பணத்தை கொண்டு ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணுற்று ஆறாம் ஆண்டு கந்தசாமி கல்வி நிதியம் என்ற பெயரில் ஒரு கல்வி நிதியம் ஆரம்பித்தார். அன்றில் இருந்து இன்று வரை தனது உடல் உழைப்பையும் தனக்கு வழங்கபடுகிற உதவிகளையும் இந்த நிதியத்திக்காகவே வழங்குகிறார். இதே போல் ஏனைய விழிபுலனற்றோரும் தமக்கு மேலதிகமாக கிடைக்கும் நிதியினை இந்த நிதியத்துக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த நிதியமானது யாழ் விழிபுலனற்றோர் சங்கத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிதியம் ஆரம்பித்தமை தொடர்பாக கந்தசாமி ஐயா கூறியது ‘ என்னை போன்ற விழிபுலனற்றவர்கள் கல்வி கற்க முடியாமல் சீரழிந்து விடக்கூடாது விழிப்புலன் இல்லை என்றால் வாழ்க்கையில் எதுவும் இல்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது அந்த எண்ணம் இல்லாமல் செயற்பட வேணும். பார்வையுள்ள பிள்ளைகளை போல பார்வையற்ற பிள்ளைகளும் வாழ்கையில் உயர வேண்டும் அதற்காகவே இந்த நிதியத்தை ஆரம்பித்தேன் என்கிறார் .இந்த நிதியத்தின் மூலம் பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தலா ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது .

தன்னுடைய கல்வி நிதியத்துக்கு நிதி பற்றாக்குறையாக இருந்த போதெல்லாம் தனது கற்பூரம் விற்கும் தொழிலை விட்டு பிறரிடம் கை நீட்டி உதவி கேட்டதாக கூறுவார். அப்போது பலர் தன்னை ஏசி அனுப்பிய பலசந்தர்ப்பங்களையும் நினைவு கூறினார். அனால் அவை எதையும் பொருட்படுத்தாது தாம் செயற்பட்டதாகவும் எம் போன்ற மாணவர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற நோக்கமே தன்னிடம் இருந்ததாகவும் தெரிவித்தார்.

கந்தசாமி கல்வி நிதியத்திற்கு தற்போது நிதி பற்றாகுறை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்ற யாழ் விழிபுலனற்றோர் கல்வி பணியாளர் கந்தசாமி ஐயாவின் இறுதி ஆசை தான் முன்னெடுக்கும் இந்த பணி தன்னோடு நின்றுவிடகூடாது என்பதேயாகும் . இவரது ஆசையை நிறைவேற்ற மனிதநேயம் கொண்ட அனைவரும் கை கொடுக்க வேணும் .

நானிலம் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.
Share:

No comments:

Post a Comment