யாழ். மாதகல் நுணசை வித்தியாலய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கக் கோரி பெற்றோர்கள் வலயக் கல்விப் பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம்…!

யாழ்ப்பாணம் மாதகல் நுணசை வித்தியாலயத்தில் காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மருதனார்மடம் வலயக்கல்விப் பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வார்ப்பாட்டம் நேற்றுக் காலை ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வலயக்கல்வி பணிப்பாளருக்கு பெற்றோர்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.
நேற்றைய தினம் மருதனார்மடம் வலயக் கல்வி பணிமனை முன்பாக ஒன்று கூடிய பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை காட்டியிருந்தனர்.
பின்னர் தமது பாடசாலையில் நீண்ட காலமாக காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கியமான பாடங்களாகவுள்ள கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய இரு பாடங்களுக்கான ஆசிரியர்கள் எமது பாடசாலையில் நீண்ட காலமாக பற்றாக்குறையாக இருந்து வருகின்றது.
குறிப்பாக இப்பாடங்கள் அதிமுக்கிய பாடங்களாக காணப்படுவதனால் இப்பாட சித்தி இல்லாமல் மாணவர்கள் அடுத்து நிலைக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் குறித்த இரு பாடங்களிலும் எமது மாணவர்கள் சித்தி எய்துவது என்பது மிகக் கடினமாகவே உள்ளது.
இதனால் எமது மாணவர்கள் பதினொராம் தரத்துடன் தமது கல்வியை இடைநிறுத்திக் கொள்ளும் துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.
இது தொடர்பில் பலதடவைகள் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்த போதிலும் அவர்கள் எமது மாணவர்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலை தொடருமானால் எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தின் முடிவில் பெற்றோர்களால் மருதனார்மடம் வலயக்கல்வி பணிப்பாளருக்கு கையளிக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது கிராமத்திலுள்ள நுணசை வித்தியாலயத்தில் இப்பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்ட காலந்தொடக்கம் (2013) கணிதம், விஞ்ஞானம் ஆகிய இரு பாடங்களுக்கும் நிரந்தர ஆசிரியர் ஒழுங்காக நியமனம் செய்யப்படவில்லை.
இதன் காரணமாக கடந்த க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் ஏனைய பாடங்களில் சித்தியெய்திய மாணவர்கள் இவ்விரு பாடங்களிலும் சித்தியெய்தாமையால் க.பொ.த உயர்தரக் கல்வியை கற்க முடியாத நிலையுள்ளதுடன் சித்தியடைந்தோர் வீதமும் பூச்சியமாகவும் உள்ளது.
கடந்த வருடம் இப்பாடசாலையில் விஞ்ஞானம் கற்பிப்பதற்கு சுயவிருப்புடன் இடமாற்றம் பெற்று வந்த ஆசிரியையும் வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனால் மாணவர்கள் கல்வி கற்றலில் அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தொடர்ந்தும் இந்நிலை பேணப்படாமல் உடனே எமக்கு கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கும் நிரந்தர ஆசிரியர்களை இடமாற்றித் தரும்படி ஒழுங்கு செய்யும்படியும், கணித பாடம் கற்பிக்கும் திருமதி சித்திரா விக்கேனஸ்வரன் அவர்கள் இடமாற்றம் செய்யப்படும் பட்சத்தில் தாம் இங்கு வந்து கடமையாற்ற எமக்கு விருப்பம் தெரிவித்துள்ளார் என்பதனையும் தங்கள் கவனத்திற்கு அறியத் தருகிறோம்.
எனவே இது தொடர்பாக ஏற்ற ஒழுங்குகள் செய்து தரும்படி தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share:

No comments:

Post a Comment