யாழ்ப்பாணம் மாவட்டம் மாதகல் பிரதேசத்தில், போரின் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளமுடியாமல், குடும்ப பொருளாதார ரீதியாக நலிவுற்றுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகள் வழங்கப்பட்டுள்ளன….!

மாதகல் புனித ஜோசப் வித்தியாலயத்தின் ஆசிரியர் நா.மாதவன் அவர்களின் வேண்டுகைக்கு அமைவாக, ‘நாங்கள்’ இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட தலைமைச்செயல்பாட்டாளர் செ.பிரதாப், இயக்கத்தின் செயல்பாட்டாளர்கள் உதவித்திட்டத்தை செயல்படுத்தினர்.
வித்தியாலயத்தின் அதிபர் திரு.பங்கிராசு தலைமையில், வித்தியாலயத்தின் ‘எட்வேட் நவரட்ணசிங்கம் திறந்தவெளி அரங்கில்’ நடைபெற்ற குறித்த மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சியில், ‘நாங்கள்’ இயக்கத்தின் அழைப்பின் பிரகாரம், மாதகல் பங்குத்தந்தை அருள்திரு கனீசியஸ், யாழ்.பல்கலைக்கழக மாணவன் பார்த்தீபன், ஐயனார் இளைஞர் கழகத்தலைவர் காமராஜ், டயானா விளையாட்டுக்கழக பிரதிநிதி மதுசாந், புனித ஜோசப் விளையாட்டுக்கழக பிரதிநிதி நிரோசன், வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் – அபிவிருத்திச்சங்கத்தினர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உதவித்திட்டத்தை வழங்கினர்.
உலகத்தினுடைய மொத்த மனச்சாட்சியையும் உலுக்கிப்போட்டிருக்கும் இங்குள்ள மனிதப்பேரவலத்துக்கெல்லாம் கொடுக்கவேண்டிய அக்கறைகள், செய்யப்படவேண்டிய மீட்பு முயற்சிகள் குறித்து, ‘நாங்கள்’ இயக்கம் தமது செயல் பணிகளை இதயசுத்தியுடன் முன்கொண்டு செல்லும் என்று, மாவட்ட தலைமைச்செயல்பாட்டாளர் செ.பிரதாப் மக்களிடம் உறுதிமொழி கூறினார்.

மேலும் மக்களுக்கு இயல்பு வாழ்க்கை கிட்டுவது தொடர்பிலும், தொடர்ந்து கொண்டிருக்கும் சமுக அவலங்கள் நிறுத்தப்படுவது தொடர்பிலும், கரிசனையுடன் செயலாற்ற அனைவரதும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ‘நாங்கள்’ இயக்கத்தினர் அழைப்பு விடுத்தனர். irruppu.இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.


Share:

No comments:

Post a Comment