தோழர் பொன்னுத்துரை (குமரன்) அவர்களின் ‘நான் நடந்து வந்த பாதை’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும்…!

முரண்பாடு கொண்டவர்களை பழிவாங்கும் “ஆயுதமாக” இயக்க வரலாறுகள் எழுதப்படும் ஒரு குரூரமான மனநிலை கொண்ட காலகட்டதில் நாம் வாழ்கின்றோம். ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட நான் உட்பட எவருமே “புனித முகத்தினை” அடைந்திடல் சாத்தியம் அற்றது. தவறுகளும், குற்றங்களும், குறைபாடுகளும் கொண்டதாகவே எம் ஒவ்வொருவரினதும் வரலாறு உள்ளது…

சமீபகாலங்களில் இணையவலைத்தளங்களில் வந்த புளொட் இயக்க வரலாற்றுக் குறிப்புக்கள் எத்தகை மலிவுத்தனமானவை என்பதும், தன்னோடு உடன்படாத் தோழர்களை ‘‘தூக்குமரத்திற்கு’‘ அனுப்பவும் தயார் என்ற வன்முறை மனோபாவத்தோடு வெளிவந்தததையும் நாம் அவதானித்தே வந்துள்ளோம். இவ்வாறன துர்ப்பாக்கிய சூழலில் குமரன் பொன்னுத்துரையின் “நான் நடந்து வந்த பாதை” என்னும், புளொட்டில் குமரன் வாழ்ந்த வாழ்வு பற்றி, அவர் எழுதிய தன் வரலாற்றுத் புத்தகம் முக்கியத்துவம் பெறுகின்றது.
குமரன் புளொட் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர். மத்திய குழுவின் அங்கத்தவராகவும், ஒரு குறிப்பிட்ட காலங்களில் தளப் பொறுப்பாளராகவும், கடல்போக்குவரத்து பொறுப்பாளராகவும் ( கரைப்பொறுப்பாளர்) கடமை ஆற்றியவர்.
இவ் வரலாற்றை அவர் எழுதும் காலங்களில் (சென்றவருடம் 2013) அவர் மரணமும் நிகழ்ந்துவிட்டது என்பது சோகமாகும். இதனால் எழுதிய குறிப்புக்களில் எழுத்துப் பிழைகள், சொற்றொடர் பிழைகளை குமரனால் திருத்தம் செய்ய முடியவில்லை.
இவ் வரலாற்றுக் குறிப்புக்களை குமரன் பதிவுசெய்ததில் எந்தவித மாற்றமும், திருத்தமும் இன்றி அப்படியே நூலாக்கியுள்ளனர் குமரனின் குடும்பத்தினர். எழுத்துப் பிழைகள், வசனப்பிழைகள் எமக்கு சற்று சிரமத்தை தந்தாலும், இதுவே ஒருவகையில் குமரனின் நூலுக்கு சிறப்பையும் – நேர்மையும் செய்கின்றது.
குமரன் தான் கண்ட- அனுபவித்த – நிழ்ந்த வரலாற்றை மிக உண்மையோடு பதிவு செய்திருப்பதே இந் நூலின் முக்கியமாகின்றது. இறைகுமாரன் – உமைகுமாரன் படுகொலை, செல்வன் – அகிலன் படுகொலை, சுழிபுரம் படுகொலை, சந்ததியார் படுகொலை, உட்கட்சிப்போராட்டம், புளொட்டின் உடைவு என பல்வேறு விடயங்களை இக் குறிப்புக்கள் பேசுகின்றன.
இந் நூலுக்கு குமரனின் துணைவியார் இரத்தினேஸ்வரி எழுதிய பதிப்புரையிலிருந்து ஒரு சிறு பகுதி :
//…. அவரது அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் மெளனம் காத்த நாம் அவரது பொதுப் பணிகளுக்கு ஊந்து சக்தியாக விளங்க முயன்றோம் என்று கூறுவது பொருத்தமானது என்பதே எனது பணிவான கருத்து. அவரது செயல்பாடுகளை நான் விளங்கினேனோ இல்லையோ, அவ்வப்போது தனது அசைவுகள் பற்றி எனக்கு கூறுவது வழக்கம். அவ்வாறு நடைபெற்ற ஒரு உரையாடலின்போதே தான் தனது கடந்த கால செயற்பாடுகளை தான் கடந்துவந்த பாதையை பதிந்துவருகின்றேன் என்று கூறியிருந்தார்.
ஏதோ எழுதுகிறார் என்பதை அறிந்தேன். என்ன எழுதுகிறார் என்று அறிய முயலவில்லை. அவரது பிரிவின் பின்பு அவருக்கு நெருக்கமானவர்கள் அது பற்றி அறிய ஆர்வம் காட்டியபோதே ஏன் நாம் அவற்றை பதிவு ஆக்கக்கூடாது என்று நினைக்கத் தோன்றியது. அந்த நினைவின் வெளிப்பாடே இந்த வெளியீடு. தவிர இதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் , பெயர்கள், கருத்துக்கள் என்பவற்றை பற்றி கேட்கவந்தால் அதற்கு உண்மையில் என்னிடம் பதில் இல்லை என்பதை தன்னடகத்தோடு கூறிவைக்க விரும்புகிறேன். எனக்கும், பிள்ளைகளுக்கும் இந்த வெளியீடு ஒரு மனநிறைவைத் தருவதால் அதை அவர் கடைசி ஆசையை நிறைவேற்றுவதாகக் கருதியே செய்கின்றோம்…//

குமரனின் “நான் கடந்து வந்த பாதை” என்ற சுயவரலாற்றுச் நூலில் சந்ததியார் பற்றி …
“””””””””””””””””””””””””””””
… இதில் முக்கியமானது இயக்க வேலைகளை நாம் யாழ்ப்பாணத்தில் இக்கால கட்டத்தில் தொடங்கவில்லை. அதற்கு காரணத்தை சந்ததியார் மிக எளிதாக விளங்கப்படுத்தினார்.
“யாழ்ப்பாண மக்கள் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் எப்போதும் ஊசலாட்டம் கொண்டவர்கள். அவர்கள் எப்பவும் நியாயம் ,அநியாயம்களை பாரது வெற்றியின் பக்கமும், எழிச்சியின் பக்கமுமே நிற்பார்கள்.ஆதலால் அவர்கள் விடையத்தை பின்பு பார்த்துக் கொள்ளுவோம்.” முதலில் விவசாய மக்களை அடித்தளமாக கொண்ட வன்னியை முதல் குறியாக கொள்ளும்படி பணித்தார். அதன் பின்பு கிழக்கு மாகாணத்திற்கு என்னை வாசுதேவாவுடன் செல்லும் படி கூறப்பட்டது.
அதன் படி நான் கிழக்கு மாகாணம் சென்றேன். ஏற்கனவே கிழக்கில் வேலை செய்த அசோக் என்பவரை வாசு அறிமுகப்படுத்தினார்.
அவரது தொடர்போடும், ஈஸ்வரனின் தொடர்போடும் கல்முனை கருணாநிதியை அம்பாறை பொறுப்பாளராக நியமித்தனர். இதில் முக்கியமானது ஏற்கனவே மட்டக்களப்பில் அமைப்பு வடிவில் இருந்தது. அந்த அமைப்புடன் நான் இணைந்து வேலை செய்தேன் அவ்வளவுதான்.
1983ம் ஆண்டு கலவரமே என்னை யாழ் அழைத்தது. அதுவே யாழ் மாவட்ட அமைப்பாளராக யாழ் வளாகத்தில் கல்வி கற்ற சத்திய மூர்த்தியை எமக்கு தந்தது…

-அசோக்-


inioru இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.
Share:

No comments:

Post a Comment