மாதகல் மக்களின் சொந்த வீடு செல்லும் கனவு எப்போது நனவாகும்…?

2012-சொந்த மண்ணிலிருந்து இடம்பெயர்ந்து சுமார் 20 வருடங்கள் கழிந்தும் இன்னமும் மீளக்குடியமர முடியாமல் இடம்பெயர்ந்தோராக வாழ்ந்து வருகின்றார்கள் மாதகல் மேற்குப் பிரதேச மக்கள் எட்டிபார்க்கும் தூரத்தில் சொந்த வீடுவளவு இருக்கின்ற போது, அங்கு சென்று குடியேற முடியாதவர்களாக அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். 1992 ஆம் ஆண்டு இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்து சென்றவர்கள் 1995 ஆம் ஆண்டு வரை வேறு ஊர்களிலேயே வாழ்ந்து வந்துள்ளனர்.

சங்கானை, மானிப்பாய், ஆனைக்கோட்டை, நவாலி போன்ற இடங்களில் முகாம் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்கள். 1995 ஆம் ஆண்டு யாழ். குடாநாடு முழுவதும் இடம்பெயர்ந்து கிளாலி கடற்கரை வரை சென்று நின்றபோது அதிகமானோர் கிளாலிக்கடல் நீரேரியூடாக வன்னிப்பெரு நிலப்பரப்புக்குச் சென்றார்கள். எஞ்சியவர்கள் முதல்முதலாக இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மக்கள் தத்தம் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

இவ்வாறே மாதகல் மக்களும் தமது சொந்த ஊருக்குச்சென்றார்கள். இருப்பினும் இராணுவ உயர் பாதுகாப்பு வலயம் என கடற்கரையை அண்டிய பகுதிகளில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்படவில்லை. காங்கேசன் துறையிலிருந்து பொன்னாலை வரை நீண்டு செல்லும் கடற்கரை வீதியும் கடற்பகுதியும் ஒரு கிலோ மீற்றர் நீளமான குடியிருப்புப் பகுதிகளும் மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் குடியிருந்த மக்கள் சொந்த ஊருக்குப் போயும் உறவினர் வீடுகளிலும் வேறு காணிகளிலும் அகதி முகாம்களிலும் தற்காலிக குடியிருப்பாளர்களாகவே தங்கியிருந்தனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னரான இக்காலப்பகுதியில் மாதகல் மக்கள் முழுமையாக வந்தடைந்த போதும் இதுவரை மாதகல் மேற்குப் பகுதி மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்படவில்லை. கடற்படை முகாம், கண்ணிவெடி அபாயம் என காரணங்களைக் காட்டி கடந்த ஆண்டு மாதகல் கிழக்குப் பகுதி மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏதும் இன்னமும் செய்து கொடுக்கப்படவில்லை.

மாதகல் மேற்கு சம்பில் துறையில் சங்கமித்தை வந்திறங்கியதாக கூறி பெரியளவில் விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதனை அண்டிய பகுதிகளில் கடற்படையினர் முகாமிட்டுள்ளனர். இவ்விரண்டையும் காரணம் காட்டி மாதகல் மேற்குப்பகுதியை கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் விட்டுத்தருமாறு பல வழிகளிலும் கேட்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தி உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து தம்மை மிக விரைவில் மீள்குடியமர்த்துமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆனாலும் இன்றுவரை அதற்கான எந்த நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை. மாதகல் மேற்கு மக்களின் அகதி வாழ்க்கை சொந்த ஊரிலும் தொடர்கிறது. தமது சொந்த காணிக்கும் மிக அருகாமையிலேயே அகதி முகாமில் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள்.

1992 ஆம் ஆண்டு மாதகல் மேற்குப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து சென்று இது வரையும் அயற் கிராமத்தில் தற்காலிகமாக வசித்து வரும் ஒரு குடியிருப்பாளரின் உள்ளக்கிடக்கையை இங்கே வாசித்துப்பாருங்கள்.
எல்லோரும் சொந்த இடத்திற்கு போவோம் என்று புறப்படுகிறார்கள். சிறு தூரம் செல்கிறார்கள். அது இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. செல்ல முடியாது என்று சொல்ல திரும்பி வந்து சிறு காலம் செல்ல போகலாம் என்ற நம்பிக்கையுடன் வேறு இடங்களில் குடிகொள்கிறார்கள். வந்த உடனே சொந்தங்கள் வீட்டில் குடிகொண்டவர்கள் நெடு காலம் அங்கேயே வாழமுடியாது. அதனால் தனியே கிடக்கும் வீடுகளை தேடி அலைந்தார்கள். பிறர் காணிகளில் குடிசைகள் அமைத்து வாழ்ந்தார்கள். பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து முகாம் அமைத்து வசித்தார்கள்.

ஓரளவு இருப்பதற்கு இடம் தேடி அன்றாட தேவைகளை நிறைவு செய்வதற்கும் பொருட்கள் தேடி தமக்கென ஓர் குடிசை அமைத்து வாழும் வேளை இன்னோர் இடப்பெயர்வு. இதனை எப்படி தாங்கிக்கொள்வது. மீண்டும் உடுத்த உடைகளுடன் கையில் கிடைத்த பொருட்களுடனும் வடமராட்சி, தென்மராட்சி, வன்னி நோக்கிப் புறப்படுகிறார்கள். அலறும் ஆட்லறிச் சத்தமும் சீறிவரும் செல் சத்தமும் பயங்கரத் தேடும் மக்களும் அவற்றை எல்லாம் தாண்டி செல்கிறார்கள். திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்ற நம்பிக்கையுடன் செல்கிறார்கள்.

பசியின் கொடுமை கண்டு கண்ணீர் வடிக்கிறது. மக்கள் களையை போக்க நினைத்தது வானம். மக்கள் உடைமைகள் நனைவதைப்பற்றி கவலைப்படவில்லை. விழும் நீரைப்பிடித்து எப்படி பருகுவது என்று விழித்து வரும் நீரை பிடித்து பருகுகிறார்கள். தென்மராட்சிப் பிரதேசத்தில் நாம் உறவினர் வீட்டில் குடிகொள்கிறோம். 6 மாதம் கடந்த நிலையில் மீண்டும் வலிகாமத்தில் வேறு ஒரு வீட்டில் குடியேறுகிறோம். இரு மாதங்களின் பின்பு வீட்டு உரிமையாளர் வர வேறு ஒரு வீட்டினை தேடுகிறோம். நாம் மட்டுமல்ல இடம்பெயர்ந்தோர் எல்லோருடைய நிலையும் இது தான்.

1998 இல் மாதகலில் மற்றைய பகுதிகளில் மீள்குடியேற்றப்படுகிறது. மாதகல் மேற்குப் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயருடன் மீள்குடியேற்றம் செய்யப்படாது காணப்படுகிறது. மாதகல் மேற்கு கிராமம் மீண்டும் எப்போது எமக்கு முழுமையாகக் கிடைக்கும் என்ற ஆவலுடன் பலர் காத்து இருக்கிறார்கள். நுணசை முருகன் ஆலயம் அருகில் பெரிதாக அமைக்கப்பட்ட வேலி. அதற்கு அப்பால் எமது வீடுகள் இருக்கிறது என்று எமக்கு காட்டுவார்கள். நாமும் எம் ஊர் பார்க்க கேட்டு வருவோருக்கு நுணசை முருகனின் தீர்த்தக்கரையில் நின்று “இதற்கு அங்கால் எங்கட வீடு” என்று காட்டுவோம்.

கடற்கரையோரம் அமைந்துள்ள லூர்து மாதா ஆலயத்திற்கு செல்லும்போது இந்த பாதையால் போனால் எம் வீடு வரும் என்று சொல்லுவார்கள். தற்போது சங்கமித்தை வந்திறங்கிய இடமான மாதகல் மேற்குப் பிரதேசத்தில் கடற்கரையோரத்தில் சம்பில்துறை என்ற இடத்தில் சங்கபோதி கட்டப்பட்டு இருக்கிறது. அதனைப் பார்க்க தென்பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். எம்மக்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து சுற்றுலாப் பயணிகள் போல் நம் சொந்த பூமியை பார்த்து வரும் நிலை காணப்படுகிறது.

எமது வீட்டை பார்க்க ஆவல் எமக்கும் தோன்றியது. போய்த்தான் பார்ப்போம் என்று வாகனத்தை விட்டிறங்கி ஒழுங்கையில் செல்கிறோம். 22.08.1992 இடம்பெயர்ந்த நாம் 22.08.2012 அன்று பார்வையிடுகிறோம். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி தம் உடலை வருத்தி கட்டிய வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு இருப்பதைப் பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை. நாம் ஓடித்திரிந்து விளையாடிய இடத்தைப் பார்க்கும் ஆவலில் எம் சொந்த மண்ணில் காலடி வைக்கிறோம்.

அரைவாசி உடைந்த நிலையில் கட்டடங்கள் என்று அரைகுறையாக கட்டடங்கள் காணப்படுகிறன. இது யாருடைய வீடு என்று ஞாபகப்படுத்திய வண்ணம் செல்கிறோம். எல்லாப் பக்கமும் ஒரே காடாகக் காணப்படுகிறது. பாம்பு வருமா என்ற பயம் ஒரு புறமிருக்க நான் பிறந்த வீட்டை பார்க்கும் ஆவல் மறுபுறம். இடிபட்ட வீடுகளை என் கமெராவில் பதிவு செய்து கொண்டு செல்கிறேன். 20 வருடமாக தமது வீடுகள் என்று ஞாபகப்படுத்தி பார்த்து இதுவரையாவது இருக்கு என்று தம் மனதுகளை தேற்றிக் கொள்ளட்டும் என்ற நப்பாசையில் ஒவ்வொரு வீட்டில் தென்படும் கட்டங்களை புகைப்படம் எடுத்த வண்ணம் செல்கிறேன்.

இது யாருடைய வீடாக இருக்கும்? ஆனால் சரியாக ஞாபகப்படுத்த முடியாத நிலை. 20 வருடத்திற்கு முன் சிறு பராயத்தில் எமக்கே சரியாக உறவுகளை தெரிந்து கொள்வதற்கு முன்பு விட்டு வெளியேறிய பிரதேசம். எம் நண்பர்கள், உறவினர்கள் வீடுகள். இத்தனை வீடுகள் இருந்தும் இரவல் வீடுகளில் வாழும் மக்களின் நிலையை எண்ணிப் பார்க்கிறேன்.
உறவுகள் எல்லாம் ஒன்றாகக் கூடி அயலவர்கள் எல்லாம் உறவாக வாழ்ந்த எம் மண்ணில் வாழ்ந்த மக்கள் மாற்றான் வீட்டு குடிசையில் உறவுகளை விட்டு வாழ்வது மிகவும் கொடுமை. மீண்டும் மண்ணில் வாழ்வோம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். 20 வருட சொந்த வீடு செல்வோம் என்ற எம் மக்கள் கனவு நனவாகுமா? அல்லது சொந்த வீடு செல்வோம் என்ற கனவுடன் எம் மக்கள் வாழ்வு முடிந்துவிடுமோ? பசுமையான எம்மூர் பழைய நினைவுகளை எண்ணிப் பார்க்கிறேன்.

அகதிகள், இடம்பெயர்ந்தோர்கள் என்ற பெயரோடு இரு சகாப்தங்களை கடந்து வாழ்ந்து வரும் மாதகல் மேற்கு மக்கள் இனியும் காலம் தாழ்த்தாது தமது சொந்த வீடுகளுக்குச் செல்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் போர் ஓய்ந்து அனைத்துப் பிரதேசங்களும் விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக் குடியமரச் செல்லும் போது இப்பகுதி மக்களை மட்டும் யாரு@ம இன்னமும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? தமது சொந்த வீடுகளில் எப்போது குடியிருப்போம் என எதிர்பார்த்திருக்கும் இம் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுவது எப்போது…?

சுபா


Share:

No comments:

Post a Comment