சங்மித்திரையும் சிங்களக் கடற்படையும் சூறையாடும் நிலம்…!

2012-நிலத்தை சூறையாட இலங்கை அரசாங்கம் பல்வேறு காரணங்களை குறிப்பிடுகிறது. இராணுவத்தின் தேவைக்காக, பாதுகாப்பின் தேவைக்காக என்ற காரணங்களை சொல்லி வந்த நிலையில் இப்பொழுது அபிவிருத்திக்காக என்றும் சங்கமித்திரைக்காக என்றும் காரணங்களை குறிப்பிடுகிறது. யாழ்ப்பாணத்தில் மேற்கு மாதகல் நிலத்தை சங்கமித்திரை வந்திறங்கியமைக்காக புனிதநகராக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. சங்கமித்திரை வந்திறங்கியமைக்காக என்று காரணம் கூறப்பட்டு கடற்படையினரால் மேற்கு மாதக ல் நிலம் அபகரிக்கும் திட்டம் தீட்டப்படுகிறது.
சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் நிலை ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய துயரம். வாழ்ந்த மண்ணுக்கு பல்லாண்டு காலமாக திரும்பாத சோகத்தை உடைய ஈழ அகதி மக்களில் மாதகல் மக்களின் துயர் நிறைந்த வாழ்க்கையின் பின்னணயில் பௌத்த மதவாத அபகரிப்பும் சிங்களப் பேரினவாத இராணுவ அரசியலும் இருக்கிறது. ஈழ மக்கள் அகதிகளாக்கப்பட்டதன் பின்னணியில் இந்த இரண்டு கடும்போக்குகளும் கலந்திருக்கின்றன. அகதிகளின் காலமும் வாழ்க்கையும் எவ்வளவு ரணமானவை என்பதையும் ஈழ அகதிகளின் வாழ்நிலைகள் எவ்வாறு காலத்தை நலிவடைய செய்திருக்கின்றன என்பதையும் மாதகல் மக்களின் வாழ்க்கை காண்பிக்கின்றன.
வீடு திரும்புதல் என்ற நிலை ஒவ்வொரு உயிரினத்திடமும் உள்ள பண்பு. நாம் வீடு திரும்பாத பொழுது நாம் எதையோ இழக்கும் நிலையை அடைகிறோம். வீடு திரும்பாத பொழுது நாம் நிறைவற்றை இழந்து விடுகிறோம். இருபது வருட நிலமிழப்பும் இருபது வருட அகதி வாழ்வும் இந்தக் கால கட்டத்திற்குள் எற்பட்ட அலைச்சல்களும் துயரங்களும் இன்னுமின்னும் பல்வேறு விடயங்களும் இந்த மக்களின் சந்ததியை மனநிலையை வாழ்க்கையை வரலாற்றை மாற்றிப் போட்டிருக்கிறது. மாதகலுக்கு நண்பன் கோகுலனின்; வீட்டிற்குச் சென்ற பொழுது அங்குள்ள சில பழமையான வீடுகள் ஆட்களற்று அழிந்து போவதைக் கண்டேன். அவனுடைய உறவுகள் பலரும் போரால் அந்தக் கிராமத்தை விட்டுச் சென்றிருந்தனர். சிதிலமடைந்த அந்த சுவர்களுக்குள் இருக்கும் பல கதைகளை எனக்கு அவன் சொல்லியிருந்தான். மாதகல் மண்ணின் வரலாறு இலங்கை - ஈழப் பிரச்சினைக்கே பெரிய சேதியை சொல்லுகிறது. அது ஈழத்தில் பௌத்தம் வந்து குடியேறிய கதையை சொல்லுகிறது. இன்றைய காலத்தில் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பும் முற்று முழுதான ஆக்கிரமிப்பும் கொண்ட கோட்டையாக இக் கிராமம் மாற்றப்பட்டிருக்கிறது. இப்பொழுது புதிய கடற்படைமுகாம் ஒன்றை கடற்படையினர் அமைக்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு மாதகல் அதாவது கடற்கரையோரம் மட்டுமன்றி ஒட்டுமொத்த மாதகல் மண்ணுக்கும் அச்சுறுத்தலான இந்த முகாங்களின் வருகை ஒட்டுமொத்த ஈழ மண்ணுக்கே ஆபத்தானது.
யாழ் மாவட்டத்தில் வலிகாமம் பிரதேச சபையில் மாதகல் கிராமமம் அடங்குகிறது. இங்கு சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேற்கு மாதகல், கிழக்கு மாதகல், மாதகல் மத்தி, மாதகல் வடக்கு போன்ற பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம், மாரிசம் கூடல், சகாயபுரம், போதி, பொக்கனை, சம்புத்துறைமுகம் என்கிற அழகிய கிராமங்கள் உள்ளடங்குகின்றன. கடலும் நிலமும் இணைந்த கிராமம். மாதல் பகுதியில் வாழும் மக்கள் தனித்துவமான முகத்தோற்றமும் பேச்சு மொழியயும் பண்பாட்டு அம்சங்களும் கொண்டவர்கள். மாது அகன்ற இடம் என்பதால் மாதகல் என்ற பெயர் உருவானதாக கூறப்படுகிறது. யார் அந்த மாது? வட இந்தியாவிலிருந்து சங்கமித்திரை என்ற மாது பௌத்த மதத்தை பரப்புவதற்காக மாதகலுக்கு வந்திறங்கி அங்கிருந்து அகன்று சென்றார். பௌத்தத்துடன் வந்து அங்கிருந்து அவர் அகன்று சென்ற பொழுது சிங்க பௌத்தவாதமாக சங்கமித்திரையின் கதை தமிழர் மண்ணில் திணிக்கப்பட்டது. 
இப்பொழுது சங்கமித்திரை வந்திறங்கிய இடத்தில் மாபெரும் பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளது. ஒரு படக்கில் பௌத்த துறவியாகிய பெண் ஒருத்தி வெள்ளரசு மரத்தோடு வந்திறங்கும் சிலைகளும் படங்களும் கதைகளும் அங்கு நிறுத்தபட்பட்டிருக்கின்றன. சங்கமித்திரையின் வருகைக்கு ஒப்பாக மேலும் இரண்டு வருகைகளை இலங்கைப் கடற்படையினர் பெருமையோடு நினைவுபடுத்துகின்றனர். இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச வருகை தந்து சங்கமித்திரையின் சிலையை திறந்து வைத்திருக்கிறார். சங்கமித்திரையைப் போல சிராந்தி ராஸபக்சவும் மாதகல் மண்ணில் சில அரச மரங்களை நட்டிருக்கிறார்.
  அடுத்து யுத்த படகுகளுடன் மாதகல் கடலில் வந்து குடியேறும் இலங்கை கடற்படையினரின் சாகசக் காட்சிகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ள பெரும் படங்களில் நினைவுபடுத்தப்படுகின்றன. ஞானத்தையும் அமைதியையும் போதிக்க சங்கமித்திரை வந்திறங்கிய மண்ணில் அமைதியையும் வாழ்க்கையும் கொல்ல யுத்தப் படைகள் வந்திறங்கின என்ற வரலாற்றுத் துயரத்தை இலங்கை கடற்படையினர் மிகுந்த பெருமையோடு நமக்கு அதிர்ச்சியைத் தரும்விதமாக நினைவுபடுத்துகின்றனர்.
  ஈழ மண்ணில் பௌத்தமும் சிங்களமும் குடியேறியது என்பதும் அந்தக் குடியேற்றங்களினால்தான் நாங்கள் வாழ்வையும் நிலத்தையும் இழந்திருக்கிறோம் என்பதையும் நிதர்சனமாக காட்டும் மாதல் மண்ணின் கதை மிகுந்த சோகம் தருகிறது. ஈழத் தமிழரின் அரசியலுக்கும் வரலாற்றுக்கும் வாழ்க்கைக்கும் நடந்தேறிய துக்கத்தை காட்டுகிறது. வரலாற்றில் நமக்கெதிராக நடந்த அநீதிகளும் வரலாறு நமக்கெதிராக பாவிக்கப்படும் விதமும் உணர்த்தப்படுகிறது.
  மாதகலில் மேற்குப்பகுதியில் மக்கள் நிலத்திற்காக போராடுகிறார்கள் என்ற கதையே அறியப்படாத வகையில் கடற்படையின் ஆதிக்கம் மிகுந்திருந்தது. பொறுக்க முடியாத மக்கள் வீதிக்கு வந்து எங்கள் நிலத்தை எங்கள் நிலத்தை எங்களிடம் தாருங்கள் என்று கோரிக்கை விடுத்தார்கள். இலங்கை கடற்படையினரின் முழு ஆளுகையில் சங்கமித்திரையை வைத்து சிங்கள பௌத்த தலமாக்கி, அதனை சுற்றுலாப் பிரதேசமாக்கி அந்த மக்களின் நிலம் பறிக்கப்பட்டது. தங்கள் நிலத்திற்காக அந்த மக்கள் ஏந்திய பதாதைகளில் 'உலக மக்களே! பறிக்கப்படும் எங்கள் குடிநிலங்களுக்காக குரல் கொடுங்கள்' என்ற உக்கிரமான வாசகங்கள் ஓங்கியிருந்தன. ஈழத்து மக்களின் உலகச் சமூகம் நோக்கிய அறைகூவலாக எழுப்பட்ட மாதகல் மக்களின் இத்தகைய குரல் வலிமையானது.
  1992ஆம் ஆண்டில் மாதகல் பகுதியை இலங்கைக் கடற்படை கைப்பற்றியது. நான் அங்கு சந்தித்த ஒரு தாய் தனது நினைவுகளை கிளறி '1992 ஆவணி இருபதில எங்கட இடத்தை பிடிச்சிட்டாங்கள்' என்றார். அத்துடன் அவர் பேசமுடியாமல் குமுறினார். அன்றைய இடப்பெயர்வுடன் மாதல் கிராமமம் முழுவதும் குடி கலைந்து போனது. அன்றோடு பலர் உலகம் எங்கும் அலையத் தொடங்கினார்கள். இன்று மாதல் எங்கும் ஆட்களற்ற வீடுகளைப் பார்க்க முடியும். அவை சிதைவடைந்து போயிருக்கின்றன. மிகவும் அகலமாக சுவரைக் கொண்ட அந்த வீடுகள் பற்றை மண்டி கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கின்றன. வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் மாதகலுக்கு திரும்பினார்கள்.
  2000ஆம் ஆண்டு இந்த மக்கள் மாதகலுக்கு திரும்பிய பொழுது மாதகலில் உள்ள தனியார் காணி ஒன்றில் முகாம் அமைக்கப்பட்டது. பள்ளமான அந்தக் காணியின் ஒரு பகுதியில் நீர்தேங்கி வருடம் முழுவதும் நிற்கிறது. மழைகாலம் ஒன்றில் அந்த முகாமிற்கு சென்ற பொழுது முற்றம் முழுவதும் மழைநீர் நீர் தேங்கியிருந்தது. 2000ஆம் ஆண்டில ஆரம்பித்த முகாம் வாழ்க்கை இப்பொழுது பன்னிரண்டு வருடங்களாகியும் நீண்டு கொண்டு செல்கிறது. சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஆரம்பித்த அகதி வாழ்க்கையை மகிந்தராஜபக்ச தொடர்ச்சியாக முன்னெடுக்கிறார்.
  2006ஆம் ஆண்டில் இந்த மக்கள் ஒருமுறை மீள்குடியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டதது. இந்தக் கிராமத்தின் பூர்விகமாக்கொண்ட சரோசமலர் அந்த நாடகம் குறித்து விபரித்தார். 'ஓவ்வொரு குடும்பத்திலும் ஐந்து பேர் போய் காணியை திருத்துங்கள் என்று சொன்னார்கள். ஒரு இரண்டு நாளில் காணியை திருத்தச் சொல்லிப்போட்டு பிறகு விடமாட்டம் என்று சொல்லிவிட்டார்கள்' இராணுவத்தின் பாவனைக்காக மக்களை துப்புரவாக்கப் பண்ணியிருக்கிறார்களா? என்ற இயல்பான கேள்வி எழுகிறது. 2006 காலப் பகுதியிலேயே மீள்குடியேற்றம் என்ற பெயரில் அரசாங்கமும் இராணுவமும் இவ்வாறான நாடகங்களை நடத்தியிருக்கின்றன என்பது முக்கியமானது. அதைவிட அண்மையிலும் மீள்குடியேற்றம் என்று மாதகல் மேற்கில் சில குடும்பஙங்கள் தற்காலிகமாக குடியிருத்தப்பட்டன. விரைவில் உங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தே அந்த மக்கள் மீள்குடியேற்றட்டார்கள்.
  ஆமிக்குள் வாழ்வு, நேவிக்குள் வாழ்வு என்ற தங்கள் வாழ்க்கையின் அடையாளத்தை அந்த மக்கள் குறிப்பிட்டார்கள். சம்புத்துறைமுகம் பகுதியில் சில மக்கள் மீள்குடியேறுவதாக வருகை தந்த பொழுது இராணுவத்தின் ஆளுகையும் நடமாட்டங்களும் நிறைந்தினால் அவர்கள் இரவுகளில் வேறு பகுதிகளில் தஞ்சமடைகிறார்கள். நேவியுடன் எப்பிடி வாழ்வது? என்று அங்கு சந்தித்த ஒரு தாய் கேட்டார். மிகவும் நியாயமான கேள்வி? இராணுவத்தை பாதுகாப்பு படைகள் என்ற பெயரில் எங்கள் நிலத்தில் அரசு குவித்திருக்கிறது. ஆனால் இந்த வாழ்க்கையும் அதன் கொடுமையும் அனுபவிக்கும் மக்களோ இதனை அந்நியப்படைகளாகவும் ஆக்கிரமிப்புப்படைகளாகவும் பார்க்கிறார்கள்.
  'பாலாலியிலிருந்து செல்கள் வீழ விமானங்கள் எங்கள் கிராமங்களில் குண்டுகளை கொட்டியது. ஆலறியடித்துக் கொண்டு ஓடினோம்' என்று இருதயநாதன் மல்லிகாதேவி குறிப்பிட்டார். சுhவகச்சியிரில் இருபது வருடம் அகதியாக வாழ்ந்துவிட்டு இப்பொழுதுதான் வந்திருக்கிறோம் என்றார் அவர். சுமார் 150 குடும்பங்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட பொழுதும் பல குடும்பங்கள் இதை நிகராகரித்து விட்டு சென்றிருக்கின்றன இந்த மக்கள் குடியேற்றப்பட்டது இந்த மக்களின் காணிகள் அல்ல. இது மீள்குடியேற்றமயல்ல இவர்கள் மாதகல் மேற்குப் பகுதி மக்கள். இவர்களை வேறு இடத்தில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் கொண்டு வந்து விடும் பொழுது இதுவும் இன்னொரு அகதி வாழ்க்கையே.

  வன்னிக்குள் மாத்திரம் ஒன்பது இடங்களில் மாறி மாறி இடம்பெயர்ந்தோம் என்று சொல்லுகிறார் மீள்குடியேற்ற பாதுகாப்பு வலய தலைவர் சுரேந்திரன். காடு அழித்தல், இராணுவத்தினர் அமைத்த மண்மேடுகள், காவலரண்கள் அழித்தல் முதலியவதற்கு எந்த திட்டமும் ஒதுக்கப்படவில்லை என்றும் சுரேந்திரன் குறிப்பிட்டார். எங்கள் ஊர் சுற்றுலாத்தளமாகவிட்டது என்று மாதகல் மக்கள் பெரும் குமுறலுடன் சொன்னார்கள். நாங்கள் படித்த பள்ளிகள் படையினரின் பயிற்சி முகாங்களாகிவிட்டன என்று கோபம் பொங்க பேசினார்கள். மாதகல் கடலுக்கு கிழக்காக உள்ள மக்களின் காணிகளில் உயர்ந்த தென்னைகள் யாருமற்று நிற்கின்றன. இடையிடையே அழிந்த வீடுகள் தென்படுகின்றன. இந்தக் கிராமத்தில் முன்பொருகாலத்தில் சனங்கள் வாழ்ந்தார்கள் என்பதை சொல்லும் இந்தக் கிராமத்தின் துயரமுகம் இப்பொழுது அந்தச் சனங்கள் என்னவானார்கள் என்றும் கேட்கிறது?
  இவற்றை எல்லாம் இங்கு வரும் சிங்கள சுற்றுலாப் பிரயாணிகள் பார்க்க மாட்டார்களா? சங்கமித்திரையின் வருகையையும் சிராந்தியின் வருகையையும் கடற்படையின் வருகையையும் பார்க்கும் மக்கள் பெயர்ந்து செல்ல வைக்கப்பட்ட மக்களை எங்கே என்று கேட்க மாட்டார்களா? என்கிற பெரும் கேள்வி எழுகிறது. இவர்கள்; சங்கமித்திரையும் பௌத்தத்தையும் வெள்ளரசு மரத்தையும் கொண்டு வந்து குடியேற்றிய இடத்தை பார்க்கும் பொழுது இந்தக் காட்சிகளை பார்க்காமல் கண்களை மூடிக்கொள்வார்களா? அங்குள்ள நுணசை மகா வித்தியாலயத்தில் படையினர் பயிற்சி எடுக்கும் சத்தம் அகதிமுகாம் வரை கேட்கிறது. 

அங்கு சாதாரண தரம் வரை வகுப்புக்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்தப் பள்ளியில் படித்த பலர் இன்று முதியவர்களாக தங்கள் கதைகளை நினைவுகூர்ந்தார்கள். நுணசை மகாவித்தியாலயம் இப்பொழுது மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் இயங்குகிறது. எங்களோடு எங்கள் பள்ளிக்கூடமும் அகதியாக இருக்கிறது என்று அந்தப் பள்ளியின் அகதி ஒருவர் குறிப்பிட்டார். 'எங்கள் பரம்பரையின் சொத்தே நிலம் ஒன்றுதான்' என்கிறார் அகதிமுகாம்வாசியான லூர்துநாயகி. 'நாங்கள் கஞ்சி குடிச்சேனும் அங்கதான் வாழ விரும்புகிறம்' என்பதை உலகத்தை நோக்கி சொல்லுகிறோம் என்கிறார் அவர். 'நாங்கள் ஓடுமட்டும் ஓடிக்கொண்டிருக்கிறம். சிங்களக்குடியேற்றம் வெகு சுலமாக மேற்கொள்ளப்படுகிறது. 

எங்கட அடுத்த தலைமுறை அறியாத எங்ட நிலம்' என்று பெரும் கண்ணீNhராடு பேசினார் மரியம்மா. தங்களின் தவிப்பை கொந்தளிப்பை சொல்ல முடியாமல் இருந்த மரியம்மா போல பல தாய்மார்கள் மாதகல் மண்ணில் கண்ணீர் விடுகிறார்கள். எங்கள் தேசம் அழகானது. எங்கள் தேசம் வளமானது. இந்தத் தேசத்தில் வாழந்த மக்களின் வாழ்க்கை வலியது, பூர்வீகமானது. வடக்கு கிழக்கில் ஒரு துண்டு நிலத்தையும் இழக்க முடியாத நிலையில் ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் துண்டு துண்டுகளாக நாங்கள் நிலத்தை இழந்து கொண்டிருக்கிறோம். மாதல் வரலாற்று ரீதியாக முக்கியமான நிலம். கடல் வளமும் நில வளமும் கொண்ட அழகிய பிரதேசம். தனித்துவமான ஈழத் தமிழர்கள் வாழ்ந்த தனித்துவமான இந்த மண்ணை ஆக்கிரமித்துள்ள சிங்கள பௌத்த பேரினவாதமும் இராணுவ மயமும் நீக்கப்பட்டு அந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் அங்கு வாழ அனுமதிக்கப்பட வேண்டும்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தமிழ்மாறன் 
குளோபல் தமிழ் செய்திகளுக்கு நன்றி
Share:

No comments:

Post a Comment