மாதகலில் மக்கள் வாழிடங்களில் பாரிய கடற்படை முகாம்…!

யாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்திலுள்ள மாதகல் பகுதியில் பாரிய கடற்படைத்தளம் அமைப்பதற்காக அக் கிராமத்தில் வளம் மிக்க பெரும்பாண்மையான நிலப்பரப்பு சிறிலங்காக் கடற்படையினரால் அபகரிக்கப்படவுள்ளது….

இதனால் அப்பகுதி மக்கள் காணியிழந்து, வீடிழந்து நிர்க்கதியாகும் நிலைக்குத் தள்ளப்படவுள்ளதாக கவலை கொண்டுள்ளனர்.

அபகரிக்கப்படவுள்ள இப்பகுதியில் இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பாடசாலை, மடங்கள், கிராம அபிவிருத்திச் சங்கம் உள்ளிட்ட அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பும் கவலையும் ஏற்பட்டுள்ளது.


கால காலமாக இப்பகுதியில் நிரந்தர குடிகளாக வாழ்ந்து வந்துள்ள இப் பகுதி மக்கள் யுத்தம் காரணமாக 1992ம் ஆண்டு இடம்பெயர்ந்து, 1995ம் ஆண்டு சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தை வன்பறித்தபின்னர் யாழ். குடாநாட்டுக்குள் இடம்பெயர்ந்தோர் குடியேறியும் வன்னிக்கு இடம்பெயர்ந்தோர் 2002ம் ஆண்டு சமாதான காலத்தில் மீள்குடியேறியும் வாழ்ந்து வருகின்றனர்.


அபகரிப்பில் உள்ளடக்கப்படுகின்ற பகுதியில் மாதகல் மேற்கு கடந்த இருபது ஆண்டுகளாக சிறிலங்கா படையினரால் உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்ட பின்னர் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது அவசர அவசரமாக மாதகல் மேற்கு மக்கள் தங்கள் சொந்த இடத்திற்கு மீள்குடியமர்த்தப்படுவர் என சிறீலங்கா அரசால் அறிவிக்கப்பட்டது. தேர்தலின் போது மேற்கொள்ளப்பட்டிருந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் திடீரென இடைநிறுத்தப்பட்டது.


இருபது வருடங்களுக்கு மேலாக தமது சொந்தக் காணியில் குடியிருக்க மாட்டோமா என ஏங்கித் தவித்த மாதகல் மேற்கு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த மக்கள் தற்போது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.


ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்த இப் பகுதி தமிழீழ விடுதலைப்புலிகளால் முன்பு பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறியே கடற்படையினரால் அபகரிக்கப்படுகின்றது. ஏற்கனவே புத்த விகாரைக்காக நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கடற்படைத் தளம் அமைப்பதற்கு பாரிய அளவில் அபகரிக்கப்படுகின்றது.


இந் நிலப்பரப்புக்குள், மூன்று வைரவர் ஆலயம், ஐயனார் கோயில், புனித சூசையப்பர் கோயில், நுணசை மகாவித்தியாலயம், மாதகல் மேற்கு உப – தபாலகம், பாரதி சனசமூக நிலையம், விநாயகர் சனசமுக நிலையம், மாதகல் மேற்கு சனசமூக நிலையம், தோமையர் சனசமூக நிலையம், பண்டத்தரிப்பு ப.நோ.கூ சங்கக் கிளை ஒன்று, பிள்ளையார் கோயில் மடம்,முருகன் கோயில் மடம் மற்றும் சங்கமித்தபோதி விகாரை என்பன உள்ளடக்கப்படுவதாக வலி. தென் மேற்குப் பிரதேச செயலரால் அறிக்கையிடப்பட்டு கடற்படை கட்டளை அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


புகழ் பெற்ற காவடிக் கந்தன் என அழைக்கப்படுகின்ற மாதகல் நுணசை முருகமூர்த்தி கோயில் மற்றும் சிவன் கோயில் முகிய இரண்டும் உள்ளடக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


அத்துடன் 325 குடும்பங்கள் தற்போது வசித்து வருவதாகவும் 258 குடும்பங்கள் மீள்குடியேற விண்ணப்பித்து இருப்பதாகவும் பிரதேச செயலர் குறிப்பிட்டுள்ளார்.


இப்பகுதியில் பெரும்பாண்மையாக கடற்றொழிலை நம்பி வாழும் குடும்பங்களே வாழ்கின்றனர். பல ஆண்டுகளின் பின்னர் கடற்றொழிலுக்கான தடை நீக்கப்பட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்து செல்லும் நிலையில் இவ்வாறு தங்கள் காணி அபகரிக்கப்படுவது குறித்து பெருங்கவலை அடைந்துள்ளனர்.


இது குறித்து யாழ். மாவட்டச் செயலர் திருமதி இமெல்டா சுகுமாரிடம் வினவியபோது,


இது குறித்த அறிக்கையை வலி. தென் மேற்குப் பிரதேச செயலரிடம் கேட்டுள்ளேன். அவர் அளித்த அறிக்கை முழுமையாக இல்லாமையால் மீண்டும் ஒரு முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளேன். அவர் அறிக்கை அளிப்பதில் தாமதம் ஏற்படுகின்றது. அவர் அறிக்கை சமர்ப்பித்தவுடன் பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.


அத்துடன் இப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர். மீள் குடியேறுவதற்கும விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் நிலம் பறிபோக நான் இடமளிக்க மாட்டேன். என மேலும் தெரிவித்துள்ளார்.
Share:

No comments:

Post a Comment